கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நடமாட்டக் கட்டுப்பாடு கட்டளையை மீறியதற்காக இரண்டு நாட்களில் 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசாங்கத்தில் பாதுகாப்பு விஷயங்களை ஒருங்கிணைக்கும் மூத்த அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி யாகோப், இதில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த முயன்ற 116 பேரும் அடங்குவர் என்று கூறியுள்ளார்.
“நேற்று, 320 பேரை போலீசார் கைது செய்தனர், அதற்கு முந்தைய நாள் 162 பேர் கைது செய்யப்பட்டனர்”.
“இரண்டு நாட்களில் 400க்கும் மேற்பட்ட கைதுகள், இணக்க விகிதங்களை அதிகரிக்க பங்களித்துள்ளன” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இணக்க விகிதங்கள் 97 சதவீதமாக அதிகரித்துள்ளன
வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட மசூதியில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமர் துறையின் அமைச்சர் பிறப்பித்த அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் இஸ்மாயில் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
“116 பேர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து மசூதிகள் இன்னும் தொழுகையை நடத்துகின்றன,” என்று அவர் கூறினார்.
“சில சமூக உறுப்பினர்கள் இன்னும் மெதுவோட்டம் (ஜாகிங்) போன்ற பிற வெளி நடவடிக்கைகளை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
போலீசார் 1,000க்கும் மேற்பட்ட சாலைத் தடுப்புகளைச் செய்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 25,000 வாகனங்களை சோதனை செய்ததாகவும் அவர் கூறினார்.
அவர்களில் பெரும்பாலோர் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று இஸ்மாயில் கூறினார்.
தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகள் 2020இன் படி (peraturan Pencegahan Dan Kawalan Penyakit Berjangkit (Langkah-langkah Dalam Kawasan Terkawal Tempatan) 2020,), எந்தவொரு நபரும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கக்கூடாது. கீழ்கண்டவைகளை தவிர:
அ) எந்தவொரு அதிகாரப்பூர்வ கடமையையும் செய்ய;
b) விதி 5இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வளாகத்திற்கும் செல்ல;
c) உணவு அல்லது அன்றாட தேவைகளை வாங்க, அல்லது வழங்க;
d) சுகாதார அல்லது மருத்துவ சேவைகளைப் பெற;
e) இயக்குநர் ஜெனரலால் அங்கீகரிக்கப்படக்கூடிய பிற நோக்கங்கள்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, மார்ச் 18 அன்று நடைமுறைக்கு வந்து மார்ச் 31 அன்று முடிவடைய இருந்தது. ஆனால் இப்போது ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ், அத்தியாவசியமற்ற வணிக மற்றும் சேவைகள் மூடப்பட்டுள்ளன. வலுவான காரணமின்றி மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற ஊக்குவிக்கப்படுவதில்லை.