இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் நபர்கள் மீது RM1,000 அபராதம் நடைமுறைக்கு வருகிறது.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் குற்றவாளிகளுக்கு அபராதத்தை செலுத்த இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்றுன் அப்படிச் செய்ய தவறும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்குவர் என்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை புக்கிட் அமான் மற்றும் பொது பாதுகாப்பு இயக்குனர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
“342 சட்டமத்தின் கீழ் (தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 1988), இந்த குற்றங்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான இயக்க நடைமுறையை (SOP) நாங்கள் பெற்றுள்ளோம்”.
“இது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும்”.
“RM1000 அபராதம். மேல்முறையீடு இல்லை. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் நீதிமன்ற விசாரணைக்கு விண்ணப்பிக்கலாம்” என்று கோலாலம்பூர் புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அபராதத் தொகையை சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் செய்யப்பட வேண்டும்.
குற்றவாளிக்கு எதிரான அபராத தண்டனை, சிறையில் கூட்ட நெரிசலை தீர்க்கும் என்று அக்ரில் சானி கூறினார்.
ஏப்ரல் 5ம் தேதி, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்ற தவறியவர்களுக்கு தண்டனை வழங்கும் போது சிறைச்சாலையின் நெறிசல் பிரச்சினை குறித்து பரிசீலிக்க நீதிபதிகளை வலியுறுத்தினார்.
சிறைச்சாலையில் நெரிசல் ஏற்பட்டு சிரமத்தை மேற்கொள்வதால், குற்றவாளியை சிறையில் அடைக்க வேண்டாம் என்று சிறைச்சாலைத்துறை நீதிமன்றத்தை கோரிய பின்னர் தலைமை நீதிபதி தன் கருத்தை தெரிவித்தார்.
அதன்படி, தெங்கு மைமுன் கூறியது போல் சிறைச்சாலையின் பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளுமாறு அனைத்து நீதிமன்ற அதிகாரிகளுக்கும் மத்திய நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் அமலாக்கத்துடன், அனாவசியமான விஷயங்களுக்கு பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
உத்தரவை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது RM1,000 வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஒரே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும் நபர்களுக்கும் அதே அபராதம் விதிக்கப்படும் என்றார் அக்ரில் சானி.
இதற்கிடையில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் அறிவுறுத்தல்களுக்கு மக்கள் கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்காக காவல்துறை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளது என்றார்.
“போலிஸ் ரோந்தின் போது சிலர் இன்னும் ஜாகிங் செய்வதைக் கண்டோம். அதனால் நாங்கள் அவர்களைப் தடுத்து வைத்துள்ளோம்.
“அத்தியாவசிய சேவைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத அனைத்து மக்களும் வீட்டில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், எந்த காரணமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது” என்று அவர் கூறினார்.