MCO – ஹரி ராயா முடியும் வரை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை

மலேசிய மருத்துவ குழு, ஹரி ராயா கொண்டாட்டம் முடியும் வரை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நீட்டிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அக்குழுவின் கூற்றுப்படி, அதிக எண்ணிக்கையானோர் கிராமத்திற்குத் திரும்புவது கோவிட்-19 பாதிப்பை மோசமாக்கும் என்றுள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் நிறுத்தங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக கூடினால் கூடல் இடைவெளியை பின்பற்றுவது தோல்வியடையும்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை திரும்பப் பெறுதல் அல்லது இலகுவான கட்டுப்பாடு அமலாக்கம், கடந்த நான்கு வாரங்களாக வீட்டில் இருந்து அடையப்பட்ட அனைத்து நன்மைகளையும் சீர்குழைத்து, எந்த பயனும் இல்லாமல் ஆக்கிவிடும்.

“கோவிட்-19க்கு எதிரான போர் இன்னும் நீண்ட தூரத்தில் உள்ளது. நிறைய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன; அது இந்த ஆண்டு முழுதும் தொடரும்” என்று குழு நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹரி ராயாவின் போது உறவினர்களுடன் நேரத்தை செலவிட விரும்பும் எண்ணம் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், இதுவரை கண்டிராத இந்த கிருமிக்கு ஒரு புதிய தடுப்பூசியை கண்டுபிடிக்கப்படும் வரை, கூடல் இடைவெளி தொடர வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

“கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, கூடல் இடைவெளி ஒரு புதிய விதிமுறையாக இருக்க வேண்டும்.”

“[…] குறைந்தபட்சம் இந்த ஆண்டு முழுவதும் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது அல்லது தடை விதிப்பது அவசியமாகும். இது ரமலான், ஹரி ராயா அல்லது ஹஜ் கூட்டமாக இருந்தாலும் சரி,” என்று குழு கூறியது.

வரவிருக்கும் கேஆமாத்தான் திருவிழா (சபாவில் மே 30) மற்றும் கவாய் தினம் (சரவாக் ஜூன் 1) ஆகிய கொண்டாட்டங்களுக்கும் இதையே பின்பற்ற வேண்டும் என்று அக்குழு நினைவுபடுத்தியது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நோம்புப் பெருநாள் மே 24 ஆம் தேதி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க ஏப்ரல் 10ம் தேதி அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சு (MOH) தரவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை பரிசீலனைக்கு MOH பல திட்டங்களை சமர்ப்பிக்கும் என்று MOH இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். அதே நேரத்தில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை எளிதாக்குவது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது என்று கூறினார்.

எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், மக்கள் சமூக-பொருளாதாரத்தில் தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என்று குழு கூறியது.

“இந்த தொற்றுநோய் மலேசிய பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் மீது ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது,” என்று குழு மேலும் கூறியது.