கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் கட்டடங்களில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளால் (eMCO) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று 1,950 உணவு பொட்டலங்களை வழங்குவதாக கூட்டரசுப்பிரதேச ஆளுநர் அன்வார் மூசா தெரிவித்தார்.
“நாங்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 1,950 உணவு பொட்டலங்களை கொடுத்து உதவுகிறோம்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.
வெளிநாட்டவர்களுக்கு தங்கள் நாட்டின் தூதரகத்திலிருந்து உணவு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அன்னுவாரின் கருத்துப்படி, உணவு விநியோகம் நேற்று இரவு தொடங்கியது என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவில் உள்ள வெளிநாட்டு மக்களுக்கு தங்கள் நாட்டின் தூதரகம் தேவைகளை வழங்க வேண்டும் என்று நேற்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
சுமார் 5,000 முதல் 6,000 பேர் குடியுருக்கும் சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன், செவ்வாய்க்கிழமை தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டது. குடியிருப்பாளர்களில் 97 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்று இஸ்மாயில் கூறினார்.
மலேசியாகினி அன்னுவரைத் தொடர்பு கொண்டு, அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகளின் அளவு அதிகரிக்கப்படுமா என்று கேட்டது.
இரு கட்டிடங்களிலும் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று நேற்று கோலாலம்பூர் மேயர் நோர் ஹிஷாம் டஹ்லான் தெரிவித்தார்.
அன்னுவார் குறிப்பிடும் உணவு விநியோகம் DBKL-உடன் இணைந்து வழங்கப்படுகிறதா என்பது தெளிவாக இல்லை.
இதற்கிடையில், பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட், இரு கட்டிடங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்றார்.
“இந்த பகுதி எங்கள் பட்டியலில் உள்ளது. உதவி விரைவில் சென்றடையும்” என்று அவர் நேற்று கூறினார்.
நேற்று மெனாரா சிட்டி ஒன் காண்டோமினியத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உணவு விநியோகித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு துவங்கியதிலிருந்து தனது அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை விநியோகிப்பது உள்ளிட்ட பல உதவிகளை வழங்கியுள்ளன என்றார்.