முன்னாள் மூத்த மந்திரி ரபிதா அஜீஸ் இன்று, பெரிக்காத்தன் கூட்டணியின் அரசாங்கம், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (GLC) இருந்து பல மூத்த அதிகாரிகளை நீக்குவது குறுத்து தனது வெறுப்பை வெளியிட்டுள்ளார்.
இன்று முகநூலில் (பேஸ்புக்கில்) தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ரபீதா, பல “திறமையான பெண்களை” உயர்மட்ட ஜி.எல்.சி பதவிகளில் இருந்து நீக்குவதற்கான பி.என்.-னின் முடிவு கண்மூடித்தனமானது என்று விமர்சித்துள்ளார்.
“அவர்களை நீக்கிவிட்டு புதிய நியமனம் செய்யப்படும் முறையை காண வெறுப்பாக இருக்கிறது”.
“பெரும்பாலும் இன்னும் ஒப்பந்தத்தின் கீழ் இருக்கும் திறமையான நபர்களை நீக்குவதும், தூக்கி எறிவதுமாக தற்போது நடக்கிறது – அவர்களில் பல தகுதிவாய்ந்த, திறமையான பெண்களை உள்ளடக்கியது […]”
“மேலும் (அவர்கள்) அவர்களின் ஆற்றல் மற்றும் திறனை சார்ந்து தீர்மானிக்கப்படுவதில்லை. இப்போதைய அரசாங்கம் கொடுக்கும் ஒரே காரணம், அவர்கள் அனைவரும் முந்தைய அரசாங்கத்தின் ‘அரசியல் நியமனங்கள்’ என்பதால், அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதே” என்று அவர் எந்த பெயர்களையும் குறிப்பிடாமல் கூறினார்.
ரபிதா, அம்னோவின் முன்னாள் மகளிர் தலைவராகவும் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
நீண்ட காலமாக ஓய்வு பெற்ற பின்னர், ஒரு காலத்தில் ‘இரும்புப் பெண்’ என்று அழைக்கப்பட்ட இவர், 2018-ல் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக டாக்டர் மகாதீர் முகமதுவின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
ஜி.எல்.சி.யில் காலியிடங்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வேண்டப்பட்ட ஆட்களால் நிரப்பப்படுமா என்ற கேள்வியை ரபீதா எழுப்பினார்.
“சொந்த மக்களை’ அப்பதவிகளில் வைத்தால் தான், மில்லியன் கணக்கான ரிங்கிட்டுகள் மற்றும் ஒப்பந்தங்கள் வரும்போது அவர்கள் ‘ஏலம்’ விட முடியும்,” என்று அவர் மீண்டும் கூறினார்.
கடந்த சில நாட்களாக, ஜி.எல்.சியில் உள்ள பல மூத்த நபர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஷெரட்டன் நகர்வு மூலம் பெரிக்காத்தான் கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றிய இரண்டு மாதங்களுக்குள், கோவிட்-19 அச்சுறுத்தலைச் சமாளிக்க நாடு இன்னமும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இவை நடந்து கொண்டிருக்கின்றன.
சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகளில், நோரிபா கம்சோ (பேங்க் ராக்யாட்டின் தலைவர்), ஹஸ்னிதா ஹாஷிம் (மாரா), ஃபரிடா அரிஃபின் (மனித வள மேம்பாட்டு நிதியகம்) மற்றும் முகமட் பக்கே முகமட் சல்லே (மலேசிய பாமாயில் வாரியம்) ஆகியோர் அடங்குவர்.
ஜக்ரி கீர் சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்ஸோ) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்; டாக்டர் நுங்சாரி அகமது ராட்ஸி கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
Ithu ore vengayam