கோலாலம்பூரில் உள்ள மூன்று குடியிருப்பு இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை (eMCO) அமல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள இராணுவ உறுப்பினர்கள், அங்குள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களால் சிறுநீர் வீச்சால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டை இராணுவத் தலைவர் ஜெனரல் அபெண்டி புவாங் மறுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அவர் கூறியுள்ளார். மேலும், இராணுவப்படை அதன் உறுப்பினர்களுக்கு அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகளை ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் கூறினார்.
“கடமையில் உள்ள இராணுவ வீரர்கள் மீது வெளிநாட்டவர்கள் சிறுநீர் வீசுவதை தவிர்ப்பதற்காக ஹெல்மெட் அணிந்துள்ளனர் என்பது உண்மையில்லை”.
“தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (eMCO) அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே இராணுவ வீரர்கள் ஹெல்மெட் அணிகின்றனர், மற்ற இடங்களில் அப்படி இல்லை” என்று அவர் இன்று கூறினார்.
கடமையில் இருந்த இராணுவ வீரர்கள் மீது, வெளிநாட்டினர் கட்டிடத்தின் மேல் இருந்து சிறுநீர் வீசி அடிப்பதைத் தடுக்க ஹெல்மெட் அணிந்திருப்பதாக இன்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
சினார் ஹரியான் செய்தித்தாள், வெளிநாட்டவர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதித்ததை குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மேல் மாடியில் இருந்து பொருட்களை எறிந்ததாகவும் தெரிவித்தது.
ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அந்த அறிக்கை, குப்பைகள் மட்டுமல்லாமல், சிறுநீர் கொண்ட பிளாஸ்டிக்குகளையும் எறிந்துள்ளனர் என்று கூறியுள்ளது.
மலேசிய காவல்துறை (PDRM), மலேசிய ஆயுதப்படைகள் (ATM), மலேசிய சிவில் பாதுகாப்பு படை (APM), கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) மற்றும் மலேசிய தன்னார்வத் துறை (RELA) ஆகியவை 24 மணி நேரமும் நிலைமையைக் கையாண்டு வருகின்றன.
அம்மூன்று கட்டிடங்கள் முன்ஷி அப்துல்லா சாலையில் உள்ள பிளாசா சிட்டி ஓன், மற்றும் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள மலாயன் மேன்ஷன் மற்றும் சிலாங்கூர் மேன்ஷன் ஆகும்.
சினார் ஹரியானின் கூற்றுப்படி, வெளிநாட்டவர்களின் இந்த எதிர்ப்பு, உணவு உதவிகளைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துடனும் தொடர்புடையது என்றும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷனில் வசிக்கும் 1,850 குடியிருப்பாளர்களுக்கு பி.கே.பி.டி.யின் 14 நாட்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவை தனது அமைச்சு வழங்கும் என்று நேற்று கூட்டரசுப்பிரதேச ளுநர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.