பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம்

பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.

ஏப்ரல் 28 வரை தொடரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பதாக இன்று அறிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

“பள்ளி விரைவில் திறக்கப்படாது. நிலைமை மேம்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியும் வரை பள்ளி திறப்பதை ஒத்திவைக்க வேண்டியிருக்கும்.

“இதற்கிடையில், நம் குழந்தைகள் வீட்டில் படிக்க வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு சிறப்பு செய்தியில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் முழுவதும், பள்ளி மீண்டும் திறக்கப்படும் வரை மாணவர்கள் தங்கள் படிப்பை வீட்டில் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் போது குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடரக்கூடிய வகையில் வீட்டு அடிப்படையிலான கற்றல் முயற்சியை செயல்படுத்துமாறு கல்வி அமைச்சகத்திடம் கேட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ரமலானும் வித்தியாசமாக இருக்கும் என்று முகிதீன் கூறினார்.

மக்கள் ரமலான் பஜார்களுக்கு செல்ல முடியாது. மசூதிகளில் தாராவிஹ் தொழுகை செய்ய முடியாது என்று அவர் கூறினார். அதற்கு பதிலாக இவற்றை குடும்பங்களுடன் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

“இவ்வருட நோம்புப் பெருநாளுக்கு வழக்கம் போல் ஒருவரின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் போகலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.