நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்க்கல்வி மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான சிறந்த வழியை இன்று ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சு மட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் நோரைனி அகமது தெரிவித்தார்.
“நம் மாணவர்கள் வீட்டிற்கு வருவது மட்டுமல்லாமல் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் முகநூல் (பேஸ்புக்) வழியாக கூறினார்.
மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் டிக்கெட் வாங்குவதற்காக பேருந்து நிலையங்களையும், வீடு திரும்புவதற்கான ஆவணங்களை பெற காவல் நிலையங்களையும் முற்றுகையிட்டனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்ற நிச்சயமற்ற நிலையில், உயர்க்கல்விக் கூடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோள் உள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான வழியை வகுக்க, அம்னோ இளைஞர் எக்ஸ்கோ வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ், தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு (MKN) அழைப்பு விடுத்துள்ளார்.
“உயர்க்கல்வி வளாகங்களில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் வாழ்க்கை நிலை குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இதனால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படக்கூடும். மேலும் இது மாணவர்களின் மனநிலை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தேசிய மாணவர் ஆலோசனைக் குழு (Majlis Perundingan Pelajar Kebangsaan (MPPK), மாணவர்கள் கட்டம் கட்டமாக வீடு திரும்ப அனுமதிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.
சபா மற்றும் சரவாக்கில் இருந்து திரும்ப வேண்டிய மாணவர்களுக்கு சிறப்பு விமானங்களை வாடகைக்கு அமர்த்தவும் MPPK அரசாங்கத்தை கேட்டுள்ளது.