கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை உலக நாடுகள் அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது கிருமி மீண்டும் பரவ வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.
“சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீட்டில் இருக்கும்படியான உத்தரவுகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளன. இந்த நடவடிக்கை சரியாக கையாளப்படாவிட்டால் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் எவ்வாறு தளர்த்துவது என்பதற்கான ஒரு வழிமுறையை WHO தற்போது கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, குறைந்து வரும் போக்கைக் காண்பிப்பதால், சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே உத்தரவை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து முறையே ஏப்ரல் நடுப்பகுதியிலும் ஏப்ரல் இறுதியிலும் தடைகளை தளர்த்த விரும்புகின்றன.
நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான எந்தவொரு முடிவும், தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பின்னரே எடுக்கப்பட வேண்டும் என்று WHO தலைவர் வலியுறுத்தினார். அதோடு, மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் போதுமானதாக இருக்க வேண்டும்; வேலை, பள்ளி மற்றும் பொது இடங்களில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருக்க வேண்டும்; வெளியிலிருந்து வரும் அபாயத்தைக் கட்டுப்படுத்த முடிய வேண்டும்; சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக கூடல் இடைவெளியின் முக்கியத்துவத்தை சமூகம் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்த பின்னரே நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உலகளவில், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கோவிட்-19 பாதிப்புகள் WHOவில் பதிவாகியுள்ளன. இதில் 92,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.