சிட்டி ஜைலாவின் மறைமுக ஆலோசனை தவறானது என்கிறது Sister in Islam (SIS)

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கணவன் மனைவியின் உறவு குறித்து, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிட்டி ஜைலா முகமட் யூசோப்பின் ஆலோசனையின் பின்னால் மறைந்திருக்கும் செய்தியை Sister in Islam (SIS) ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கருத்துரைத்துள்ளது.

சிட்டி ஜைலாவின் அந்த ஐந்து நிமிட வீடியோவில் வெளியிடப்பட்ட ஆலோசனைகள், பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், கணவரின் வன்முறை நடத்தையை ஏற்றுக்கொண்டு மன்னிக்கவும் வேண்டும் என்ற மறைமுகமான செய்தி இருப்பதாக SIS தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. துணை அமைச்சர் என்ற முறையில், அவர், ஒடுக்குமுறை மற்றும் அச்சத்திலிருந்து விடுபட பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி ஆதரவளிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பே தனது அமைச்சின் முன்னுரிமை என்பதை அவர் வலியுறுத்த வேண்டும்” என்று SIS ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடும்ப வன்முறை நிகழும் உறவில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள அமைச்சு தவறிவிட்டது என்று அந்த வீடியோ காட்டுகிறது என்று SIS கருதுகிறது.

நேற்று, சிட்டி ஜைலா ஒரு வீடியோ பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் குடும்பங்களுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும், இது குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட மூன்று வழிகளையும் அவர் அதில் வழங்கினார். தன் துணையை நேசிப்பது, மன்னிப்பது மற்றும் மதத்தை பின்பற்றுவது ஆகியவை அதில் உட்பட்டிருந்தது.

அதே நேரத்தில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், உதவிக்காக, அமைச்சின் Talian Kasih ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சிட்டி ஜைலா கூறினார்.

வன்முறை புரியும் வாழ்க்கைத் துணையை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், மன்னிக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், சமூக ஆர்வலர் மரினா மகாதிர் உட்பட சிலர், அந்த வீடியோ செய்தியையும் சூழலையும் பார்க்க அப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றுள்ளனர்.

இதற்கிடையில், குடும்ப வன்முறை தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த செய்திகளை வழங்குவதில் சிட்டி ஜைலா மற்றும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்று SIS கூறியுள்ளது.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் குடும்ப வன்முறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சாரியா நீதித்துறை இயக்குநர் ஜெனரல் முகமட் நைம் மொக்தாரின் வீடியோவை சிட்டி ஜைலா ஒரு எடுத்துக்காட்டாக எடுக்க வேண்டும்”.

“அவ்வீடியோவில், பெண்கள் தங்களை அடிமைகளாக கருதாமல், தங்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க, கொடுமை செய்யப்பட்டால் வீட்டை விட்டு வெளியேறவும் தைரியம் இருக்க வேண்டும் என்று முகமட் நைம் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்”, என்று SIS மேலும் கூறியது.