நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் தற்போது உயர்க்கல்வி வளாகங்களில் தங்கி இருக்கும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இன்னும் அனுமதி இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை ஏற்கனவே உயர்க்கல்வி அமைச்சிடமிருந்து (Kementerian Pengajian Tinggi (KPT) பரிந்துரையைப் பெற்றுள்ளது என்றும், இது தற்போது சுகாதார அமைச்சினால் (KKM) ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டால், அதில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட நேரிடும் என்று அவர் கூறினார்.
“நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் உயர்க்கல்விக்கூடங்களில் சுமார் 80,000 மாணவர்கள் உள்ளனர்.”
“எங்களுக்கு கிடைத்துள்ள இந்த தொகை, கல்லூரி வளாகங்களில் வசிக்கும் மாணவர்களை மட்டும் அடக்கியுள்ளது. வளாகத்தில் வசிக்கும் மாணவர்களைத் தவிர்த்து, சொந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களும் உள்ளனர்,” என்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அதன்படி, இதுபோன்ற நடவடிக்கையினால் மாணவர்கள் மீது மட்டுமல்ல, தங்கள் ஊரிலுள்ள மக்கள் மீதும் ஏற்படும் தாக்கத்தையும் சுகாதார அமைச்சு ஆராயும் என்று இஸ்மாயில் கூறினார்.
“கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை சற்று சரிவைக் கண்டுள்ளது. எனவே இது போன்ற விஷயங்கள் தங்களின் முயற்சிகளை பாதிக்க MoH விரும்பவில்லை. இதனால் நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருக்கும் மீதமுள்ள மலேசியர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் வெளியுறவு அமைச்சகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் இஸ்மாயில் கூறினார்.