பெரிக்காத்தான் தேசிய கூட்டணி அரசாங்கம், ஙா கோர் மிங் என்பவருக்கு பதிலாக அசாலினா ஓத்மான் சைட்டை நாடாளுமன்ற துணை சபாநாயகராக நியமிக்கும் என்று சின் செவ் டெய்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஷயத்தை அம்னோ தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடி அசாலினாவுக்கு அறிவித்ததாக அம்னோவிலிருந்து ஒரு ஆதாரம் மேற்கோளிட்டுள்ளது.
சின் செவ் டெய்லி இந்த விஷயம் குறித்து கருத்து கேட்க அசாலினாவை அணுகியபோது, முன்னாள் அமைச்சரான அவர், நாடாளுமன்றத்தின் அமர்வு இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க இயலாது என்றுள்ளார்.
தற்போதைய சபாநாயகர் முகமட் ஆரிப் முகமட் யூசோப்பை மாற்றுவதற்கு அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி ஆரிப், அமானா கட்சியில் சேர்வதற்கு முன்பு பாஸ் உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற சபையின் தலைவராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.
அறிக்கையின்படி, ஆரிப் ஒரு “PH நபர்” என்று கருதப்பட்டாலும், தற்போதைய அரசாங்கம் அவரை வெளியேற்றாது என்று பெயரிடப்படாத ஆதாரம் கூறியதாக தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை கைப்பற்றியதில் இருந்து, பெரிக்காத்தான் அரசாங்கம், பாக்காத்தான் அரசாங்கத்தின் அரசியல் நியமனங்களை தீவிரமாக மாற்றி வருகிறது.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, நாடாளுமன்றத்தின் புதிய முடிவு எதுவும் இல்லாத வரை தனது பணியைத் தொடருவேன் என்று ஙா கூறினார்.