ஜாலான் மஸ்ஜித் இந்தியா மூடப்பட்டுள்ளது

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இரண்டு கட்டிடங்கள் தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அங்கு வாழும் மக்கள் கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையை மேற்கொள்ள அனுமதிக்க இப்பகுதியில் உள்ள அனைத்து வணிகங்களும் இன்று மூடப்பட்டன.

இன்று காலை மலேசியாகினி நடத்திய ஆய்வில், இப்பகுதியில் உள்ள அனைத்து வணிகங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.

லுலு ஷாப்பிங் சென்டர் தொழிலாளர்கள் உட்பட, அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிய பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

“ஆம், இன்று சுகாதார அமைச்சு இங்கு வசிக்கும் அனைவருக்கும் ஸ்கிரீனிங் சோதனைகளை நடத்தியது. மஸ்ஜித் இந்தியாவில் வசிப்பவர்கள், லுலு மற்றும் மைடின் பேரங்காடி தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் (ஹோட்டல்) தங்கி இருப்பவர்கள் என்று அனைவரும் மருத்துவ சோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று பெயர் குறிப்பிட மறுத்த ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

ஏப்ரல் 7ம் தேதி, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலேயன் மேன்ஷன் கட்டிடங்களை தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்க அரசாங்கம் உத்தரவிட்டது.