இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

பெட்டாலிங் ஜெயா அருகே உள்ள தங்கும் விடுதியில் நேற்று இரவு இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 மற்றும் 37 வயதுடைய அப்பெண்களை தங்கும் விடுதியில் இருந்து மீட்ட பின்னர், 30 வயதுடைய அந்த சந்தேக நபர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நிக் எசானி முகமட் பைசல் கூறினார்.

இரு பெண்களும் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு சாலைத் தடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஆரம்ப விசாரணையில் இரு பெண்களிடமும் முழுமையான பயண ஆவணங்கள் இல்லை என்பதும், அவர்கள் பாலியல் தொழில் வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதும் தெரியவந்தது.

“இந்த இரண்டு பெண்களும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கான இடைக்கால பாதுகாப்பை வழங்குவதை நாங்கள் தொடர்கிறோம்” என்று அவர் இன்று டாமான்சாராவில் ரோந்து சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சந்தேகநபர் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376ன் கீழ் (Seksyen 376 Kanun Keseksaan) வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் நிக் எசானி தெரிவித்தார்.