கம்போங் பாரு PKNS அடுக்குமாடி குடியிருப்பில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது

தலைநகரில் கம்போங் பாரு சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக குடியிருப்பு பகுதியில் (Rumah Pangsa Perbadanan Kemajuan Negeri Selangor (PKNS), Kampung Baru) கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாகினி இன்று பிற்பகல் அக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஆய்வில், அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தது.

இப்பகுதியில் 19 நேர்மறை கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று அறியப்படுகிறது.

இருப்பினும், இப்பகுதி இன்னும் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு கீழ் உட்படுத்தப்படவில்லை.

வெளியில் இருந்து யாவரும் இந்த வீட்டுவசதி பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும், குடியிருப்பாளர்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முக்கியமான பணிகளுக்காக வெளியேற விரும்புவோர் கண்காணிப்பு நோக்கங்களுக்காக தங்களின் பெயர்களை எழுதி, கடமையில் இருக்கும் காவல் அதிகாரியிடம் தகவல்களை வழங்க வேண்டும்.

இதற்கிடையில், டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் பாஹ்மி விஸ்வநாதன் அப்துல்லா, சுகாதார அமைச்சு இங்கு மருத்துவ சோதனையை மேற்கொண்டதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.