காதிர் ஜாசின்: கோவிட்-19ஐ முகிதீன் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்கிறார்

பிரதம மந்திரி பதவியை நிலைநிறுத்திக் கொள்ள முகிதீன் யாசின் கோவிட்-19 தொற்றுநோயையும் பொருளாதார கொந்தளிப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ஏ காதிர் ஜாசின் கூறுகிறார்.

பாகோ எம்.பி.-யான முகிதீன், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதன் மூலம் ஆதரவைப் பெற அவருக்கு போதுமான நேரத்தை வழங்கிக் கொண்டதாக காதிர் தனது வலைப்பதிவு இடுகையில் வாதிட்டார்.

“அவர் (முகிதீன்) இந்த தொற்றுநோயை காரணம்காட்டி, நாடாளுமன்ற அமர்வை மார்ச் 9-ல் இருந்து மே 18-க்கு ஒத்திவைத்துள்ளார்”.

“அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இருந்தால், அவருக்கு ஆதரவைத் திரட்ட இது போதுமான நேரத்தைக் கொடுக்கும்,” என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பெர்சத்து கட்சியில் தனது ஆதரவை வலுப்படுத்தவும் முகிதீனுக்கு நேரத்தை வழங்கியுள்ளது என்று காதிர் கூறினார்.

“கட்சியின் வருடாந்திர பொதுக் கூட்டங்கள் மற்றும் தலைமைத் தேர்தல்கள் உட்பட அனைத்து கட்சி நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

கட்சியின் தேர்தலில் முகிதீன் தலைவர் (President) பதவிக்கு போட்டியிடும் வேளையில், டாக்டர் மகாதீர் முகமட் பெர்சத்து நிர்வாகத் தலைவர் (Chairperson) பதவியை போட்டியின்றி வென்றுள்ளார்.

துணைப் பிரதமரை நியமிக்காததன் மூலம், முகிதீன் புத்திசாலித்தனமாக தன்னை மிக முக்கியமானவராகவும், சவால் செய்யப்பட முடியாதவராகவும் தன்னை ஆக்கிக்கொண்டுள்ளார் என்று காதிர் கூறினார்.

“அதற்கு பதிலாக, அவர் நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்துள்ளார். எனவே, அவர்களும் முகிதீனை சவால் செய்ய வாய்ப்பில்லை.”

பெர்சத்து பிளவுபட்டுவிட்டதாக காதிர் குறிப்பிட்டார். சிலர் மகாதீருக்கு ஆதரவளிக்கிறார்கள். மற்றவர்கள் முகிதீனின் முகாமில் இருக்கிறார்கள். பெர்சத்து கட்சி இறுதியில் அம்னோவுடன் இணையும் என்ற ஊகங்களும் உள்ளன.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில், அம்னோ மூத்த அமைச்சர்களை பிரபலபடுத்த முகிதீன் அனுமதித்துள்ளார், என்றும் அவர் கூறினார்.

“முகிதீன் இறுதியில் பெர்சத்துவை அம்னோவுடன் இணைத்து, தன் பிரதம மந்திரி பதவியை பயன்படுத்தி அக்கூட்டணியை வழிநடத்தக்கூடும் என்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது,” என்று அவர் கூறினார்.

அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்று மகாதீர் பலமுறை கூறியிருந்தார். ஆனால் அதன் உறுப்பினர்களை பெர்சத்து கட்சிக்குள் தனிநபர்களாக ஏற்றுக்கொண்டார்.

“நல்லாட்சி, பொறுப்புணர்ச்சி மற்றும் தொழில் திறன் ஆகியவை முன்னுரிமையாக இல்லாத அம்னோ தசாப்தங்களுக்கு முகிதீன் நாட்டை மீண்டும் வழிநடத்தி கொண்டு செல்கிறார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது” என்று காதிர் வாதிட்டார்.