பி40 குடும்பங்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏன்?

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள பி40 குடும்பங்களுக்கான உணவு கூடைகளை விநியோகிப்பதில் பெண்கள், குடும்பம் நல மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (KPWKM) “தாமதங்கள்” குறித்து, சில எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

225,871 வீடுகளுக்கு உணவு கூடைகள் கிடைத்துள்ளதாகவும், இது சுமார் ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்பு கூறி இருந்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ் நேற்று தன் ட்விட்டர் பதிவில் முதலில் தன் கவலையை தெரிவித்தார். ஒவ்வொரு பகுதிக்கும் சமூக நலத்துறையின் (Jabatan Kebajikan Masyarakat (JKM) மூலம் மத்திய அரசு 1,000 உணவு கூடைகளை வழங்கும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஹன்னா குறிப்பிட்டார்.

இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நான்காவது வாரத்தில் நுழைந்த போதிலும், கோலாலம்பூரில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விநியோகத்தை இன்னும் பெறவில்லை என்று ஹன்னா கூறினார்.

“ஒவ்வொரு பகுதிக்கும் ஜே.கே.எம். (JKM) மூலம் மத்திய அரசு 1,000 உணவு கூடைகள் வழங்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோலாலம்பூரில் உள்ள பல எம்.பி.க்கள் இன்னும் உணவு விநியோகத்தைப் பார்க்கவில்லை. இப்போது நாம் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நான்காவது வாரத்தில் இருக்கிறோம்.”

“பெண்கள், குடும்ப நல மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹாருன் பதிலளிக்க வேண்டும்,” என்று ஹன்னா யோஹ் கூறினார்.

உதவி தேவைப்படும் குடும்பப் பெயர்களை தனது அலுவலகம் ஏப்ரல் 9 ஆம் தேதி ஜே.கே.எம்-க்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தனக்குத் தகவல் கிடைத்ததாக ஹன்னா யோஹ், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

“இப்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நான்காவது வாரமாகும். உணவு கூடையின் நோக்கம் பசித்தவர்களுக்கு உணவளிப்பதாக இருந்தால், அதை நான்காவது வாரத்தில் ஏன் விநியோகிக்க வேண்டும்?

“நெருக்கடி காலங்களில் உணவை அரசியலாக்குவது வெறுப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங், ஏப்ரல் 1 ம் தேதி செகமாட் ஜே.கே.எம் அலுவலகத்துடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஒவ்வொரு எம்.பி.க்கும் 1,000 உணவு கூடைகள் கொண்ட சிறப்பு அரசாங்க ஒதுக்கீடு குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“செகமாட் ஜே.கே.எம் சொன்னபடி உணவு கூடைகளுக்காக பொறுமையாகக் காத்திருந்தபின், அதை எங்கள் சேவை மையத்திற்கு வழங்காததற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினர்,” என்று அவர் கூறினார்.

லுமூட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஹட்டா ராம்லியும், ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை நிலவரப்படி உணவு கூடைகள் விநியோகிக்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.

“உதவி தேவைப்படும் பெறுநர்களின் பட்டியலை எனது அலுவலகம் சமர்ப்பித்து விட்டது. ஆனால் உணவு கூடை எப்போது வரும், அல்லது அதன் விநியோகத்தை யார் மேற்கொள்வார்கள் என்பது குறித்து எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, ஜே.கே.எம் தனது பகுதிக்கு வழங்கிய 300 உணவு கூடைகளைப் பெற்றதாக அவருக்குத் தகவல் கிடைத்தது என்றார்.

“சமூக நலத்துறை 300 கூடைகளைப் பெற்றுள்ளது மற்றும் விநியோக வழிமுறைகளுக்கு காத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பெர்லிஸில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளும் உணவு கூடைகளைப் பெற்று விநியோகித்துள்ளன.

கங்கார் எம்.பி. நூர் அமீன் அகமது தனது தொகுதிக்கு வழங்கப்பட்ட உணவுக் கூடைகள் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு விநியோகிக்கப்பட்டது என்றார்.