“வைசாகி, சித்திரைப் புத்தாண்டு, விஷு – பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்”

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி இன்றும் நாளையும் வைசாக்கி, சித்திரைப் புத்தாண்டு மற்றும் விஷு (மலையாளி புத்தாண்டு) கொண்டாட்டங்களை மலேசிய இந்துக்கள் வீட்டில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான், இந்த ஆண்டு, தமிழ் இந்துக்கள் மற்றும் மலையாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் புதிய ஆண்டைக் கொண்டாட ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றார்.

“வழக்கமாக, சித்திரைப் புத்தாண்டு மற்றும் விஷுவை அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட வாய்ப்பு கிடைக்காது. இவை ஒரு பொது விடுமுறை நாளும் அல்ல, மேலும் பெரும்பாலும் வார நாட்களில் விழும். எனவே குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாகும்”.

“கோயில்கள் வழிபாடுகளை செய்தாலும் கூட, மக்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. எனவே வீட்டிலேயே வழிபாடுகளைச் செய்யுங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

சித்திரைப் புத்தாண்டு இன்று இரவு 10.04 மணிக்கு பிறந்தாலும், அது சூரிய உதயத்திற்குப் பிறகு ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.

“நாளை காலை 8:00 மணி முதல் காலை 9:30 மணி வரை வழிபாட்டுக்கு சிறந்த நேரம். நல்ல உணவை சமைத்து உண்ணுங்கள். பொது நன்மைக்காகவும், நாட்டிற்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுங்கள்” என்று அவர் கூறினார்.

சித்திரைப் புத்தாண்டு இந்து சூரிய நாட்காட்டியின் முதல் நாள். இந்த ஆண்டு சார்வரி ஆண்டு என்று அழைக்கப்படும்.

‘கோவிட்-19-லிருந்து விடுபட பிரார்த்தனை

இதற்கிடையில், மலேசியாவின் குருத்வாரா கவுன்சிலின் தலைவர் சர்தார் ஜாகீர் சிங் இந்த வைசாகி புத்தாண்டில் உலக அமைதிக்காக வீட்டிலிருந்து பிரார்த்தனை செய்ய மலேசியாவில் உள்ள சீக்கிய சமூகத்தினரை அழைத்தார்.

“சீக்கிய நானாக்ஷாஹி நாட்காட்டியின் படி, புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று பிறக்கும். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக வீட்டில் கொண்டாடுங்கள் என்பது எனது அறிவுரை” என்று அவர் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் கொண்டாடுவது என்பது வழிபாட்டுத் தலத்திற்குச் செல்வதைப் போன்றது என்று ஜாகீர் தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

“கோவிட்-19 பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வர பிரார்த்தனை செய்யும் படி நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.