‘முடி திருத்தும் கடைகள் இயங்க அனுமதி இல்லை’

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முடி திருத்தும் கடைகள் மற்றும் மூக்குக்கண்ணாடிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என்று இன்று தெரிவித்தார்.

“அரசாங்கம் எப்போதும் மக்களின் குரலைக் கேட்கும். இப்போதும் மக்களின் குரலை கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில நிபுணர்களின் ஆலோசனையையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கருத்துகளையும் அரசாங்கம் கேட்டுள்ளது”.

“எனவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் வரை, நாடு முழுவதும் உள்ள முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் மூக்குக்கண்ணாடிக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற முடிவை பிரதமர் முகிதீன் யாசின் எடுத்துள்ளார்”.

“மக்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் இது பதிலளிக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே முடிதிருத்தும் கடை குறித்த பிரச்சினைகள் இனி எதுவும் இருக்காது என்று பிரதமரே முடிவு செய்துள்ளார்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில், முடி திருத்தும் கடைகள் மற்றும் மூக்குக்கண்ணாடிக் கடைகள் இயங்குவதை அனுமதித்த முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கோரியிருந்தார்.

இதனிடயே, தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்பும் பொது மற்றும் தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களை தொடர்ந்து அங்கேயே இருக்குமாறு அரசு முடிவு செய்துள்ளது என்றார் இஸ்மாயில் சப்ரி.

“மாணவர்களின் நலன் மற்றும் நீர், உணவு ஆகியவை அரசாங்கத்தால் ஏற்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்த முடிவுகள் அனைத்தும் கோவிட்-19 சங்கிலியை உடைத்து நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எடுக்கப்படுகின்றன என்றார்.

ஒரு வெகுஜன நடமாட்டம் ஏற்பட்டால், காவல்துறையினரால் கண்காணிப்பது கடினமாக இருக்கும், மேலும் புதிய கோவிட்-19 பரவல்கள் சாத்தியமாகும். இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காகவே என்பதை மாணவர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.