கோவிட்-19 குவாந்தானில் புதிய கிளஸ்டரை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது

இதில் 20 நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் தற்போது குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கிளஸ்டரில் இரண்டு நபர்கள் குணமடைந்து மீண்டுள்ளனர். மேலும் மூன்று பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த கிளஸ்டரில் ஒரு நோயாளி (நோயாளி 1,575) ஏப்ரல் 3 அன்று இறந்து விட்டார்.

இந்த கிளஸ்டரில் உள்ளவர்களில் மூன்று பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதற்கு மூலமான நோயாளி 4,684, இவர், ‘நோயாளி 1,575’ உடன் நெருங்கிய தொடர்புக்கு வருவதற்கு முன்பு, இந்தோனேசியாவின் பாலிக்கு பயணம் செய்த வரலாற்றை கொண்டுள்ளார். நோயாளிகள் இருவரும் உடன்பிறப்புகள்.

இதைத் தொடர்ந்து, ‘நோயாளி 1,575’-இடமிருந்து ஏழு பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கிளஸ்டரிலிருந்து 202 சுகாதார ஊழியர்கள் உட்பட 339 நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு கோவிட்-19க்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், நூர் ஹிஷாம், சுகாதார அமைச்சகம் பெரிய கோவிட்-19 நோய்த்தொற்று கிளஸ்டர்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளது என்றும் மொத்தமாக சுமார் 25 பெரிய கிளஸ்டர்கள் அல்லது துணைக் கிளஸ்டர்கள் உள்ளன என்றும் கூறினார்.

கோவிட்-19 நோயாளிகளில் 40 சதவீதம் பேர் ஸ்ரீ பெட்டாலிங் கிளஸ்டரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

“69 ஸ்போரேடிக் (sporadic) பாதிப்புகளும் உள்ளன,” என்று அவர் கூறினார்.

ஸ்போரேடிக் பாதிப்புகள் என்பது, நோய்த்தொற்றின் மூலத்தை அடையாளம் காண முடியாத சூழ்நிலை என்று அவர் விளக்கினார். (கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நேரடியாக தொடர்பில்லாத ஒருவருக்கு கோவிட்-19 நோய் தொற்று இருப்பது)

இருப்பினும், புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிப்பதைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உதவியுள்ளது என்றார் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.