இயற்கையைப் போற்றி, இயற்கையுடன் வாழ்வோம் – சேவியர் ஜெயக்குமாரின் புத்தாண்டு செய்தி

சித்திரை சார்வரி புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார், குடும்பத்துடன் வீட்டிலேயே கொண்டாடி கொரோன நோய் தொற்றுக்கு இடமளிக்காமல் சுகத்தினைப் பேணுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன் நாம் கொண்டாடிய புத்தாண்டுகள், புதியவை புகுத்தலும், பழையவை கழித்தலுமாகவே இருந்தன, ஆனால் கடந்த விகாரி வருடமானது மனிதக் குள வாழ்வையே கேள்விக் குறியாக்கும் விதமாக விகாரமான ஆட்டத்தை ஆடி, கடந்த காலச் சம்பிரதாயங்களைப் புரட்டிப் போட்டு விட்டுப் போய் விட்டது.

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் சாம்பிராணி, கோமியம், மஞ்சள், வேப்பிலை போன்ற பலவற்றைக் கிருமி நாசினிகளாக பயன்படுத்தி வந்தனர். அதாவது சுத்தத்தின் மகத்துவம் அறிந்து நமது முன்னோர்கள் சாங்கியம் சம்பிரதாயங்களின் வழி இப்பொருட்களின் தேவையை  நமக்கு மீண்டும்-மீண்டும் உணர்த்தி வந்தனர். அப்பொழுதெல்லாம் அதனை ஊதசீனப்படுத்திய சமூகத்திற்கு, முன்னோர்களின் மகத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு உயிர் கொல்லி நோய் தேவைப் பட்டுள்ளது

அதனால், நம் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் கற்றுத்தந்த பாடத்தின் சிறப்பை உணர்ந்து, நாம் பழமைக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துவதாகவும் நடந்து வரும் சம்பவங்கள் அமைந்து வருகிறது.

ஒவ்வொரு புத்தாண்டையும் மற்றப் பெருநாள்களையும் கொண்டாட இல்லங்களையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதையும், பலகாலமாகச் சைவ உணவுகளை உட்கொள்வதையும்  நம் உணவோடு பயன்படுத்தி வரும் மஞ்சள், இஞ்ச், பூண்டு, வெங்காயம், வேப்பிலை, வெற்றிலை, துளசி, கற்பூரவள்ளி போன்ற எண்ணற்ற மூலிகைகளின் பயன்பாட்டினால் நம் உடலுக்குக் கிடைத்து வந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திகளையும் அறியாமல் இருந்து விட்டோம்.

நமது வீடுகளுக்கு  அருகில் வளர்க்கப்படும் முருங்கை , வேப்பிலை, வில்வ மரங்கள் மற்றும் மூலிகைகளும் நமது சுற்று வட்டாரத்தையே தூய்மைப்படுத்தி வந்ததைக் கூட நாம் மதிக்கவில்லை, மறந்து அந்தத் தாவரங்களை புரக்கணித்தோம்.

இன்றைய கொரோனா வைரஸ் தாக்கம் இயற்கையைப் போற்றி, இயற்கையுடன் வாழ்ந்த நம் முன்னோர்களின் மருத்துவ, அறிவியல் நுண்ணறிவை உணர்ந்து கொள்ள மட்டும் நமக்கு வாய்ப்பு வழங்க வில்லை, அதனை உலகுக்கோ உணர்த்தியுள்ளது, இந்தியச் சமுதாயம் நமது நல்வாழ்வுக்கு, நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள பல அறியப் பொக்கிஷங்களை மீண்டும் ஆராயவும், அவைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் நமக்கு அறிய வாய்ப்பு.

எதிர் காலத்தில் நமது உணவு முறைகளை மட்டுமல்லாத, நாமும் நாடும் வாழ, வளர வழிகாட்டும் விதமாக, நமது நடனம், தியானம் போன்ற கலாச்சாரங்களையும் உலகுக்கு விற்க முடியும். நாம் நலமாக வாழ்ந்து, முன்னேற்ற கரமான சமுதாயமாக உயர்த்தும்  ஆண்டாகச் சார்வரி புத்தாண்டைக்  கொண்டாடி மகிழ்வோம் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.