தீபகற்பத்தில் இருந்து சபா, சரவாக் மாநிலங்களுக்கான மாஸ் விமான சேவை இவ்வாரத்திற்குள் மீண்டும் தொடங்கும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது, தீபகற்பத்தில் இருந்து சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குமாறு போக்குவரத்து அமைச்சு மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், தான் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்டை (MAB) தொடர்பு கொண்டதாகவும், இந்த வாரம் அதன் விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.

கோலாலம்பூர் – கூச்சிங்; கோலாலம்பூர் – மிரி; கோலாலம்பூர் – கோத்தா கினபாலு இடையே அவ்விமான சேவைகள் இருக்கும்.

இரண்டு விமான நிறுவனங்களும் வாரத்திற்கு ஒரு முறை அந்தந்த இடங்களுக்கு பறக்கும் என்று வீ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிக தேவை இருந்தால் MAB அதன் விமான சேவையை அடுத்த வாரம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 30 வரை, இரு விமான நிறுவனங்களும், மலிண்டோவும் சரவாக் செல்லும் விமானங்களை ரத்து செய்ததையடுத்து, மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸாவின் புகாரைத் தொடர்ந்து வீயின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று, அப்துல் கரீம், விமான சேவையை ரத்து செய்வது கோவிட்-19 தொற்றுநோயின் சங்கிலியை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றாலும், செயற்பாட்டை சீராகச் செய்வதற்கு பயணிகள் மீது கடுமையான சீர்தர இயக்கச் செய்முறையை (Standard Operating Procedure) விதிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவையை நிறுத்துமாறு அமைச்சகம் ஒருபோதும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியதில்லை என்று வீ கூறினார்.

மார்ச் 25 அன்று, ஏர் ஏசியா நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான சேவைகளை மார்ச் 28 முதல் ஏப்ரல் 28 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த கடினமான காலங்களில் பயணிகளையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதற்கான சிறந்த நடவடிக்கையாக இது இருக்கும் என்று ஏர் ஏசியா கருதியது.

“பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதமாகக் குறைந்துவிட்டதால், மாஸ் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது. அந்நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து, மேலும் கடுமையான தாக்கங்களைத் தவிர்க்க தற்காலிகமாக சேவையை நிறுத்த வேண்டியிருந்தது” என்று வீ கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது அதன் சரக்கு விமான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன என்பதை MAS தெளிவுபடுத்தியதாகவும் வீ வலியுறுத்தினார்.

இது, கோலாலம்பூர் – கூச்சிங்; கோலாலம்பூர் – கோத்தா கினபாலு; மற்றும் கோலாலம்பூர் – லாபுவான் இடையே வாரத்திற்கு மூன்று முறை நடைபெறுகின்றன.