நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டம் இன்று முடிவடைகிறது, நாளை மூன்றாம் கட்டம் தொடரும்

ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டம் இன்று முடிவடைகிறது. நாளை தொடங்கும் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 28 வரை தொடரும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறை, நாட்டின் COVID-19 பாதிப்பை உடைப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருளாதாரத் துறைகளும் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும். ஆனால், இவை கடுமையான சுகாதார மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுடன் திறக்கப்படும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கடந்த மார்ச் 18 அன்று அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாக செயல்பட்டு வந்தாலும், இது தொடர்பான குற்றங்களுக்காக தனிநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு தினமும் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை காண முடிகிறது.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நாட்டில் அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றுள்ளார். மலேசிய ஆயுதப் படை மற்றும் மலேசிய காவல்துறையினரால் சாலைத் தடைகள் மற்றும் வாகன சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று ஒரு ஊடக அறிக்கை, 1,471 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 949 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 503 பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் மற்றும் 19 நபர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் 51 நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இன்றுவரை, மலேசியாவில் COVID-19 நிலைமை மேம்பட்டு, மனநிறைவை அளிக்கிறது. நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது. இது புதிய நேர்மறையான பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

மருத்துவமனையில் இருந்து குணமடைந்த மொத்த COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 2,276 அல்லது மொத்த பாதிப்புகளில் 47.23 சதவீதமாக உள்ளது.