MTUC – பொருளாதாரம் என்ற பெயரில் பாதுகாப்பை இழந்துவிடாதீர்

பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பொது பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை பிரதமர் முகிதீன் யாசினுக்கு நினைவூட்டியுள்ளது மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC).

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை ஏப்ரல் 28 வரை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை MTUC வரவேற்று ஏற்றுக்கொண்டதாகவும், அது ஒரு தேவை என கருதுவதாகவும் அதன் பொதுச்செயலாளர் ஜே சாலமன் தெரிவித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் அமலாக்கம், பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதித்த போதிலும், கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியமாகும்”.

“இருப்பினும், பொருளாதாரத்தை மீண்டும் திறக்க சில தலைவர்கள் மற்றும் முதலாளிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து MTUC கவலை கொண்டுள்ளது”.

“பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், முக்கியமில்லாத வணிகத்தை மீண்டும் திறக்க அனுமதிக்கும்போது, பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இருப்பதாக தெரிகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

முடி திருத்தும் கடை மற்றும் மூக்குக்கண்ணாடி கடை இயங்கும் அனுமதியை திரும்பப் பெற்ற முகிதீனின் முடிவை சாலமன் ஆதரித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, மாணவர்கள் பல்கலைக்கழக வளாகங்களிலேயே தங்குவது, ரமலான் பஜாரை தடை செய்தது போன்ற நடவடிக்கைகளையும் MTUC பாராட்டியது.

“இருப்பினும், சலவை நிலையங்கள், வன்பொருள் கடைகள் மற்றும் மின்பொருள் கடைகள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக முதலாளிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகம் அறியப்படவில்லை.” என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சின் முழு ஆதரவு இன்றி அத்தியாவசியமற்ற வணிகத்தைத் திறப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் MTUC ஆதரிக்காது என்று சாலமன் கூறினார்.

“கோவிட்-19 பற்றி நமக்கு இதுவரை தெரிந்ததைப் பொறுத்து, அதிகமான கடைகளைத் திறப்பதால் ஆபத்தும் மிகப் பெரியதாகவே இருக்கும்”.

“நாம் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியேறும் போது ஏற்படும் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆபத்து, மிகவும் உண்மையானது. பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு அதை நாம் புறக்கணிக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.