மலேசியாவில் இன்று 36 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து இது மிகக் குறைவான பதிவாகும்.
இது மொத்த தொற்றுநோய்களை 5,425 ஆகக் கொண்டுவருவதாக சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“இது தினசரி பாதிப்புகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஒன்றாகும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மார்ச் 20க்குப் பிறகு முதல் தடவையாக இன்று இறப்புகள் ஏதும் இல்லை என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 89 ஆகவே உள்ளது.
மேலும் 98 நோயாளிகள் கோவிட்-19ல் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.
மொத்தம் 3,295 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது மொத்த நோயாளிகளில் 60.7 சதவீதம் ஆகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் இன்னும் 2,041 செயலில் உள்ள பாதிப்புகளைக் காட்டுகின்றன. அதாவது இன்னும் சிகிச்சையில் உள்ள கோவிட்-19 நோயாளிகள், இவர்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும் வாய்ப்பு உள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களில், 45 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். இவர்களில் 28 பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர்.