பிரபாகரன் நேற்று இரவு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சாந்தாரா குமார் ராம நாயுடு உடனான “மோதலுக்கு” பின்னர் கைது செய்யப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நேற்று இரவு 10 மணியளவில் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையான சிறிது நேரத்திலேயே பேஸ்புக் வழியாக ஒரு அறிக்கையை நேரலையில் வெளியிட்ட பிரபாகரன், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் காலகட்டத்தில் தன் கடமைகளைச் செய்ய முறையான இயக்க நடைமுறையை (SOP) பின்பற்றியதாகக் கூறியுள்ளார்.

அவரது நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.

சமூக நலத்துறையிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று புகார் அளித்த பெரும்பாலான மக்களின் நிலையைப் பார்க்க, இப்போது தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு கீழ் (பி.கே.பி.டி) இருக்கும் செலாயாங் தாமான் ஸ்ரீ முர்னி பகுதிக்கு சென்றதாக பிரபாகரன் கூறுகிறார்.

“நான் ஒரு ஹீரோ, சூப்பர்மேன் அல்லது ஸ்பைடர்மேன் ஆக விரும்பவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக நான் எனது கடமையைச் செய்ய மட்டுமே விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

தான் அங்கு சென்ற போது, சாந்தாரா குமார் ராம நாயுடு, செலாயாங் மொத்த விற்பனை சந்தைக்கு அடுத்துள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு சந்திப்பை நடத்துவதை அறிந்ததாகவும், துணை அமைச்சரான அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாகவும் பிரபாகரன் கூறினார்.

இதற்கிடையில், பிரபாகரன் அழைக்கப்படாமல் கட்டுப்பாட்டு மைய அறைக்குள் நுழைந்ததாகவும், கூட்டம் முடியும் வரை காத்திருக்கும்படி கூறப்பட்டதும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சாந்தாரா குமார் ராம நாயுடுவும் அவரது உதவியாளர்களும் கூறினர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக தன் நிலைபாட்டை அறிந்து இருப்பதால், கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து பிரபாகரன் ஏமாற்றம் அடையவில்லை என்று கூறினார்.

காவல்துறை மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாட மீண்டும் தாமான் ஸ்ரீ முர்னிக்குத் திரும்பி செல்ல, கூட்டம் முடியும் வரை காத்திருந்ததாக அவர் கூறினார். பின்னர் அவர் மீண்டும் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட முடிவு செய்தார்.

“மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து சில யோசனைகளை வழங்க நான் துணை அமைச்சரை (சந்தாரா) சந்திக்க விரும்பினேன்.

“மொத்த விற்பனை சந்தை (மற்றும் அதன் வர்த்தகர்கள்) தொடர்பான பிரச்சினைகள் எனக்கு நன்கு தெரியும். இதில் நான் ஒரு நிபுணர் என்றும் நீங்கள் கூறலாம்,” என்று அவர் கூறினார். வர்த்தகர்கள் அடிக்கடி அவருடன் சந்தித்து புகார்களை வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கட்டுப்பாட்டு மையத்தைப் அடைந்ததும், போலிசார் அவரை உள்ளே செல்ல அனுமதித்ததாகவும், அங்கே சந்தாரா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதைக் கண்டதாகவும் கூறினார்.

துணை அமைச்சரை சந்திப்பதற்கு பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் வரை பொறுமையாக காத்திருந்ததாக பிரபாகரன் கூறினார்.

“ஆனால் துணை அமைச்சர் இதற்கு ஒத்துழைக்கவில்லை, எனது புகாரை ஏற்கவில்லை”.

“ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை அவர் சிபிபியால் மிகவும் அழுத்தமாக இருந்திருக்கலாம். பிறகு அவர்கள் என்னை கட்டுப்பாட்டு மையத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள்,” என்று அவர் கூறினார்.

“ஒரு எம்.பி.-யே சரியாக நடத்தப்படாவிட்டால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை?” என்று பிரபாகரன் கேட்டார்.

இது குறித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு வெளியே நேரடி முகநூல் (பேஸ்புக்) ஒளிபரப்பை செய்ய விரும்பினார் பிரபாகரன். ஆனால் அதை அனுமதிக்காமல், அவரை அந்த பகுதியை விட்டு வெளியேறச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவர் வேறொரு இடத்தில் நேரலையில் இருந்தபோது, சந்தாரா தன்னை சந்திக்க விரும்புவதாக போலிசார் அவரை அணுகியுள்ளனர். அவர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தபோது, அவரை செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவு கிடைத்ததாக போலீசார் பிரபாரகரனிடம் கூறியுள்ளனர்.

பிரபாரகரன் சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இருந்தார் என்றும் அவரது வாக்குமூலம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக சாந்தாரா குமார் ராம நாயுடு கூறியுள்ளார்.