“ஜாஹிட், முகிதீனுக்கு எழுதிய கடிதத்தில் என்ன தவறு உள்ளது?” – அசலினா

அம்னோ தலைவர்களுக்கு பதவி கேட்டு, பிரதமர் முகிதீன் யாசினுக்கு அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி அனுப்பிய கடிதத்தில் எந்தத் தவறும் இல்லை என்று பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் விவரித்தார்.

இந்த கடிதம், முகிதீனுக்கு ஜாஹிட் எழுதிய மரியாதைக்குரிய வேண்டுகோள் என்று அசலினா கூறினார். குறிப்பாக அம்னோவும் இன்று நாட்டை வழிநடத்தும் தேசிய கூட்டணியில் (பி.என்) ஒரு அங்கமாக இருப்பதால் இதில் எந்த தவறும் இல்லை என்றார் அசலினா.

“நான் கடிதத்தின் உள்ளடக்கங்களைப் படித்தேன், கடிதத்தில் எந்த தவறையும் நான் காணவில்லை. அது, ஒரு கட்சித் தலைவரிடமிருந்து இன்னொரு தலைவருக்கு எழுதப்பட்ட ஒரு கண்ணியமான கடிதம்”.

“நாங்கள் கூட்டாளர்களாக இருக்கிறோம், எனவே இதைப் பற்றி எங்களைத் தவிர்த்து வேறு யார் பேச முடியும்?” இன்று தனது முகநூல் அறிக்கையில் கூறினார்.

‘அம்னோ அதிக அரசாங்க பதவிகளை கேட்கிறது’ (UMNO presses for more government post) என்ற தலைப்பில் தி எட்ஜ்ஜின் நேற்றைய கட்டுரை குறித்து கருத்து தெரிவித்தார் அசலினா.

நான்கு சபா அம்னோ தலைவர்களுக்கு பதவி கொடுப்பதற்கான பரிசீலிப்பைக் கோரி ஏப்ரல் 17 ஆம் தேதி முகிதீனுக்கு ஜாஹிட் எழுதிய கடிதத்தை இந்த அறிக்கை மேற்கோள்காட்டியது.

கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக அம்னோவுக்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்தும், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (GLC) அம்னோ தலைவர்களின் “நியமனங்கள்” குறித்தும் அசாலினா கேள்வி எழுப்பினார். இதில் பல நியமனங்கள் இன்னும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு நாளும் சிலர், இரண்டு மாதங்களுக்கும் குறைவான பி.என். அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டே இருக்கிறார்கள்”.

“எல்லாவற்றிற்கும் மேலாக, PH அரசாங்கம் தங்கள் வேட்பாளரை நியமித்தபோது பொதுமக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருந்ததாக எனக்கு நினைவு இல்லை. ஆகவே, நேற்று தி எட்ஜ் கட்டுரைக்கு எனது பதில் – நாங்கள் (பெர்சத்து, பி.என்., பாஸ் மற்றும் பிற கட்சிகள்) கூட்டணி அரசாங்கத்தில் பங்கு தானே?

“அரசாங்க நிர்வாகத்தில் நியாயமான பதவி விநியோகத்தை கோருவதற்கு எங்களுக்கு (அம்னோ) உரிமை இல்லையா? பெயரால் மட்டுமே நாங்கள் நண்பர்களா, செயலில் இல்லையா? இது அரசியல் யதார்த்தம். அல்லது, நான் அதைக் கவனிக்க தவறிவிட்டேனா?” என்று அவர் கூறினார்.

பி.என்-னில் “எல்லாம் மோசமானவை” என்று பார்க்க வேண்டாம் என்றும் அசலினா பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

“பி.என். அரசாங்கம் 61 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தி வருகிறது. நாங்கள் அனைவருமே மோசமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

ஜாஹித்தின் கடிதம் ஒரு சாதாரண நடைமுறை என்று சிலர் கருதினாலும், சிலர் இதை ஒரு தலையீடாக கருதுகின்றனர், மேலும் சிலர், முகிதீன் அச்சுறுத்தப்படுகிறார் என்று கருதுகின்றனர்.