உயர்கல்வி மாணவர்கள் வீடு திரும்ப அரசாங்கம் உதவும்

இன்னும் தங்களின் உயர்கல்வி வளாகத்தில் உள்ள மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க பெற்றோரின் வேண்டுதல்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், எந்த உயர்கல்வி வளாகத்திலும் கோவிட்-19 கிளஸ்டர்கள் இல்லை என்று சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்றார்.

மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் முடிவு ஏற்பட்டால், குறிப்பிட்ட இயக்க நடைமுறைகளை (SOP) அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்ல வேண்டாம்

“ஒரு நேரத்தில் 80,000 முதல் 100,000 பேர் வீட்டிற்குச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை, அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் சுகாதாரத் சோதனை மேற்கொள்ள வேண்டும்”, என்றும் அவர் கூறினார்.

“மாணவர் வீடு திரும்புவதற்கு எவ்வாறு உதவுவது என்பதை உயர்கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் ஆராயும். அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டால், அவர்களின் வருகையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த விவரங்களை நாம் கவனமாகப் பார்ப்போம்,” என்றார்.

முன்னதாக, பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, தங்களின் வீட்டிற்கு திரும்ப அனுமதி இல்லை என்று அரசாங்கம் முடிவு செய்ததாக இஸ்மாயில் ஏப்ரல் 13ம் தேதி அறிவித்தார். அங்கு தங்கியிருக்கும் காலத்திற்கு அவர்களின் உணவு மற்றும் பிற வசதிகள் அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்று இஸ்மாயில் தெரிவித்தார்.