பத்து எம்.பி. பி.பிரபாகரனுடனான தனது தகராறு குறித்து கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் ராம நாயுடு விளக்கமளித்துள்ளார்.
செலாயாங் மொத்த விற்பனை சந்தைக்கு அடுத்துள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் பல அரசு தரப்பினர்களுடன் தனி சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்ததாக சந்தாரா கூறினார்.
“இது ஒரு தகராறு அல்ல. முக்கியமான தரவுகளை ஆய்வு செய்வதற்கான ஒரு தனிப்பட்ட முறையிலான கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கிக் கொண்டிருந்தேன். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (எம்.கே.என்) பிரதிநிதிகள், காவல்துறை தலைவர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் இருந்தனர்.”
“அந்த நேரத்தில் ஒய்.பி. பிரபாகரன் கதவைத் திறந்து உள்ளே வந்தார். அந்த நேரத்தில் நான் கூட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை. பொது நலத்துறையுடன் (ஜே.கே.எம்) ஒரு சந்திப்பையும் இன்னும் தொடங்கவில்லை. நான் அவரை வெளியே காத்திருக்கச் சொன்னேன்”.
“ஒய்.பி. பின்னர் குரலை எழுப்பினார். ஒய்.பி. கொஞ்சம் வெளியே காத்திருந்து கூட்டத்தை முடிக்க விடுங்கள்” என்று நான் கூறினேன்.
இதற்கிடையில், செகாமாட் எம்.பி.யான சந்தாரா, வீடியோவைப் பதிவேற்றிய பிரபாகரனின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும் விளக்கினார். கூட்டத்தில் பல சாட்சிகள் இருந்தனர் என்றும் கூறினார்.
போலிஸ் புகார் அளிக்கவும், பிரபாகரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தனக்கு விருப்பமில்லை என்றும் வழக்கறிஞரிடமிருந்து ஆலோசனை பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
“பேஸ்புக் வீடியோவைப் பார்க்கும்போது, அது ஒரு அவதூறு போன்றே தெரிகிறது. ஆனால் சிபிபி சூழ்நிலையில் இரண்டு கட்சிகளும் – மக்களுக்கு சேவை செய்ய ஒன்றுபட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
எம்.கே.என். எழுத்துப்பூர்வ அனுமதி வழங்கவில்லை
இதற்கிடையில், அடையாளம் கூற மறுத்துவிட்ட எம்.கே.என். பிரதிநிதி ஒருவர், நேற்று பிரபாகரன் அவரிடம் கூறியது போல எம்.பி.க்கு சேவை செய்ய எழுத்துப்பூர்வ ஒப்புதல் படிவத்தை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
“எம்.கே.என். இடமிருந்து கிடைத்ததாகக் கூறிய விண்ணப்பக் கடிதத்தை எனக்குக் காட்டும்படி நான் ஒய்.பி. பிரபாகரன் அவர்களிடம் கேட்டேன், ஆனால் அவர் அமைதியாகவே இருந்தார்”.
“நாங்கள் எம்.கே.என்., அந்த எம்.பி.க்கு எழுத்துப்பூர்வ அனுமதி வழங்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்” என்று அவர் அச்செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் மஸ்லான் லாசிம், பிரபாகரன் தடுத்து வைக்கப்பட்டதை உறுதிபடுத்துனார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் பிரிவு 186ன் கீழ் (Seksyen 186 Akta Pencegahan dan Pengawalan Penyakit Berjangkit 1988 (Akta 342) அவர் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“அவர் எம்.கே.என்.-னிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளையும் நாங்கள் விசாரிப்போம்” என்று அவர் கூறினார்.