மத அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஏன் அரபு மொழியில் எழுதப்பட்டது என்று சமூக ஆர்வலர் சித்தி காசிம் கேள்வி எழுப்பினார்.
பிரதம மந்திரி துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் அல் பக்ரி, வெள்ளிக்கிழமை கூட்டரசு பிரதேசத்தில் சாக்காட் கட்டணம் குறித்த ஊடக அறிக்கையை வெளியிட்டதை அடுத்து சித்தி காசிம் இவ்வாறு கேட்டுள்ளார்.
“நமது தேசிய மொழி அரபு மொழியா அல்லது மலாய் மொழியா?”
“மத ஊடகங்களின் அறிக்கை ஏன் அரபு மொழியில் உள்ளது என்பதைப் பற்றி தயவு செய்து கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று சித்தி காசிம் தனது முகநூலில் எழுதினார்.
அந்த அரபு மொழியில் வெளியிடப்பட்ட செய்தி, மலாய் மொழி அறிக்கையின் மொழிபெயர்ப்பு ஆகும்.
இதற்கிடையில், ட்விட்டர் பயனர் @mkhairulazri ஒருவர், மலாய் மொழியல்லாத வேறு எந்த மொழிபெயர்ப்பு அறிக்கையும் அரசு முத்திரை கொண்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில் அல்லாமல், வெள்ளை காகிதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
மலேசியாகினி டாக்டர் சுல்கிப்லியை கருத்துக்காக தொடர்பு கொண்டது.
இதற்கிடையில், ஐடில் காலித் என்று அழைக்கப்படும் ஒரு வழக்கறிஞர், அனைத்து மொழிகளும் ‘சட்டப்பூர்வமாக’ இல்லாததாலும், நாட்டின் மொழி வரிசைமுறையை மக்கள் புரிந்துகொண்டுள்ளதால் இதில் பிரச்சனை ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 152-ன் கீழ், தேசிய மொழி அனைத்து அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம்”.
“அதே நேரத்தில், இரண்டாவதாக, இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் (அரசியலமைப்பின் பிரிவு 3). மேலும் நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இஸ்லாமிய மதத்தை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது” என்று அவர் முகநூல் வழியாக விளக்கினார்.
ஆகவே, இந்த நாட்டில் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக அரபு மொழிக்கு ஒரு உயர்ந்த இடம் உண்டு, ஏனெனில் இது குர்ஆன் மற்றும் ஹதீஸின் மொழி, அதே போல் அறிஞர்களின் துராதிக் புத்தகங்களின் மொழியும் ஆகும்”.
“இந்த நாட்டில் மொழியின் படிநிலை மற்றும் நிலையைப் புரிந்து கொள்ளாத முட்டாள்கள் மட்டுமே, உத்தியோகபூர்வ விழாக்களில், ஏன், பிரார்த்தனைகள் அரபு மொழியில் படிக்கப்படுகின்றன, தேசிய மொழியில் அல்ல என்று கேள்விகளை எழுப்புவார்கள்” என்றார்.
முன்னதாக, டாக்டர் சுல்கிப்லி தனது செய்திக்குறிப்பில், கூட்டரசுப் பிரதேச சட்ட ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூட்டரசு பிரதேசத்துக்கான சாக்காட் கட்டணம் RM5 மற்றும் RM7 என நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்தார்.
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து தற்போதைய நிலைமையைப் பார்த்து, இக்கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.