பி.எஸ்.எம். : தட்பவெப்ப நெருக்கடி நிலையை, கோவிட் -19 நமக்கு உணர்த்தியுள்ளது

நமது சுகாதார அமைப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன, உலக நெருக்கடியை சமாளிப்பதில், உணவு பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்வதில் தலைமையேற்க, உலக நாடுகள் இன்னும் தயார்நிலையில் இல்லை என்பதனை, கோவிட்-19 சம்பவம் நமக்கெல்லாம் நன்கு உணர்த்தியுள்ளது என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 22, பூமி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அவ்வறிக்கையில், கோவிட் -19 சம்பவத்தில், உலகளவில் 2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, கடந்த 6 மாதங்களில் கிட்டத்தட்ட 170,000 உயிர்கள் பலியாகியுள்ளன என்று அக்கட்சியின் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப நெருக்கடிநிலை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய வளர்ந்த நாடுகளின் விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மனித நாகரிகத்தின் மீதான தட்பவெப்பநிலை நெருக்கடியின் தாக்கம், கோவிட் -19 தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானது அல்ல, மாறாக அது மிகவும் அழிவுகரமானது எனும் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கியுள்ளது,” என்றார் அவர்.

பச்சை இல்லத்தில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக உலகளாவிய தட்பவெப்பநிலையில் கடுமையான மாற்றம் ஏற்படும். அம்மாற்றம் விவசாயத்தையும் கடல் உற்பத்தியையும் பாதிக்கும், இதன் விளைவாக உணவு பற்றாக்குறை ஏற்படும் என்ற அவர், தட்பவெப்பநிலை மாற்றத்தால், மழை பெய்வதும் குறைந்து போகும், இதனால் நீர்த் தேக்கப் பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்களுக்கு நீர் விநியோகமும் குறையும் என எச்சரித்தார்.

“காலநிலை மாற்றம் மனிதகுலத்திற்கு நோய் மற்றும் சுகாதார பிரச்சினைகளை அதிகரிக்கும். மனிதனின் சிகிச்சையளிக்கும் திறனையும் தாண்டி, கடுமையான புதிய நோய்களைப் பருவநிலை மாற்றம் உருவாக்கும்; பலவீனமான சுகாதாரத் துறையால் தட்பவெப்பநிலை நெருக்கடியின் தாக்கத்தைக் கையாள முடியாமல் போகும்,” என சரண்ராஜ் நினைவுறுத்தினார்.

தற்போது உலகளவில் அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, புதைப்படிவ எரிபொருள்களை அதிகளவில் குறைத்துள்ளது. இதனால், நகர்ப்புறங்களில் காற்று, ஒலி மற்றும் நீர் மாசுபாடும் குறைந்துவிட்டது.

“ஆக, புதைப்படிவ எரிபொருட்களைக் குறைப்பதற்கும் பச்சை இல்லத்தின் வாயுக்களை விடுவிப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் பூமியை இன்னும் குணப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. இருப்பினும், மாசுபாட்டைக் குறைக்க, மனிதர்கள் தயாராக வேண்டும், மனிதனின் ஒத்துழைப்பினால் மட்டுமே பூமியைக் குணப்படுத்த முடியும்.”

“அதுமட்டுமின்றி, கோவிட் -19 நெருக்கடி, புதைப்படிவ எரிபொருள் நுகர்வு மற்றும் கரியமிளவாயு உமிழ்வைக் குறைக்க, தட்பவெப்ப அவசரநிலை அறிவிப்பின் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

“எனவே, 2020 உலகப் பூமி தினத்தில், மலேசியாவில் தட்பவெப்பநிலை அவசரப் பிரகடனத்தை அறிவிக்குமாறு, தேசியக் கூட்டணி (பக்காத்தான் பெரிக்காத்தான்) அரசாங்கத்தை பி.எஸ்.எம். வலியுறுத்துகிறது,” என்ற சரண்ராஜ், பி.எஸ்.எம்.-இன் பரிந்துரைகளை முன்வைத்தார்.

அவை :-

  1. புதைப்படிவ எரிபொருள் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான நிரந்தர தடை;
  2. முக்கிய நகரங்களில் முழுமையான பொது போக்குவரத்துகளை மேம்படுத்துதல்;
  3. பெட்ரோலியத் துறை மற்றும் செம்பனை எண்ணெய் ஆலைகள் மீத்தேன் வாயுவை வெளியிடுவதைத் தடைசெய்தல்;
  4. மலேசியக் காடுகளை அழிப்பதைத் தடை செய்தல்.