நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு முடிவுக்கு வந்த பின்னரும் பசுமையான வாழ்க்கை முறையை தொடர்ந்து பின்பற்றுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராஹிம் மான் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, மலேசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து வருவதைக் காண முடிகிறது. சுற்றுச்சூழலில் சாதகமான முன்னேற்றங்கள் உள்ளன என்ற உண்மையை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டது.
“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு ஏற்ப, நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் காண்கிறோம், வானம் பிரகாசமாகவும், நதி தெளிவாகவும் இருக்கிறது. தற்போதைய நிகழ்வுகள் குறித்து உலகம் முழுவதில் இருந்தும் இது தெரிவிக்கப்படுகிறது”.
“எனவே, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு முடிந்த பிறகும், பொது போக்குவரத்து பயன்பாடு, வீட்டிலேயே மின்சாரத்தை திறம்பட பயன்படுத்துதல், மறுசுழற்சி நடவடிக்கைகள் போன்ற பசுமையான வாழ்க்கை முறையை தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் அமைச்சு, 2020 புவி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு முகநூலில் வெளியிடப்பட்ட சிறப்பு உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
“தீவிர காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மலேசியாவில் வெள்ளம் மற்றும் நீடித்த வறட்சி போன்றவற்றை உணரத் தொடங்கியுள்ளோம். இது மக்களின் வாழ்க்கையை கடினமாக்குகிறது” என்றும் இப்ராஹிம் கூறினார்.
கரிவளி (கார்பன் டை ஆக்சைடு) போன்ற அதிகப்படியான பைங்குடில் வளிக்கள் ((Greenhouse gases) ) வளிமண்டலத்தில் வெளியேற்றுவது என்பது, நேரடியான மற்றும் மறைமுகமான மனித செயல்பாடுகளின் விளைவாகும் என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் மற்றும் உலகின் நலன் குறித்து, காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும் சுற்றுச்சூழல் அமைச்சு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
“இந்த அருமையான நிலத்தைப் பாதுகாக்க உங்களின் ஆதரவும், அர்ப்பணிப்பும், நடவடிக்கைகளும் மிகவும் முக்கியம்”.
“புவி தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. இது இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான தொடர்ச்சியான கூட்டு முயற்சியாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு புவி தின கருப்பொருள் ‘காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை’ என்று இருந்தபோதிலும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காரணமாக பெரிய அளவில் அதை மேற்கொள்ள முடியவில்லை.
இருப்பினும், சுற்றுச்சூழல் அமைச்சு தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தது.
1970இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று புவி தினத்தின் 50வது ஆண்டுவிழா ஆகும்.