நேற்று இரவு ஈப்போ, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் அமைந்துள்ள வாழை இலை உணவகம் ஒன்றில் விருந்துண்டு மது அருந்தி மகிழ்ந்ததாக நம்பப்படும் பத்து இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 முதல் 44 வயதுடைய அவர்களை பேராக் காவல்துறை தலைமையத்தின் குற்றவியல் புலனாய்வு பிரிவு (டி4), இரவு 8.50 மணிக்கு தடுத்து வைத்ததாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்மாடி அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
“மேற்கு ஈப்போவில் கோவிட்-19 கண்காணிப்பை நடத்திய காவல்துறையினர், உணவகத்திற்குள் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து கதவைத் திறந்துள்ளனர். அங்கு, 10 இந்திய ஆடவர்கள் சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் கண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள், உணவகத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து, உணவக உரிமையாளருக்கு வழங்கப்பட்ட உணவகத்தின் வணிக உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
“நாட்டில் கோவிட்-19 நோய் பரவியதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு குறித்து அனைத்து கைதிகளும் அறிந்திருப்பதாகவும் புரிந்துகொண்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டனர்” என்று அவர் கூறினார்.
அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269ன் (Seksyen 269 Kanun Keseksaan) கீழும், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் விதி 11(1)ஐ (Peraturan 11 (1) Peraturan-Peraturan Pencegahan Dan Pengawalan Penyakit Berjangkit 2020) மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.