சுகாதார அமைச்சரின் பரிதாப நிலை

இராகவன் கருப்பையா- புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு பிரபலமான ஒரு அமைச்சர் என்றால் அது சுகாதாரத்துறை அமைச்சர் அடாம் பாபாவாகத்தான் இருக்கும்.

உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைச்சர்கள் தத்தம் நாடுகளில் கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தினால் அதிக அளவில் பிரபலமடைந்துள்ளனர்.

ஆனால் அடாம் பாபாவோ ஒவ்வொரு முறையும் எதாவது எடக்கு முடக்காக சொல்லப் போய் பரிதாபகரமாக சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்.

கோவிட்-19க்கு எதிரான நம் நாட்டின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே நோயின் தாக்கம் குறைகிறது என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்து மக்களின் கவனத்தை தன் வசம் திருப்பினார் அடாம் பாபா.

ஆடுத்த சில நாட்கள் கழித்து தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர், வெந்நீர் அருந்தினால் உடம்பில் உள்ள கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று கூறி உலகளாவிய கவனத்தையே ஈர்த்தார்.

உலகம் முழுவதும் 180க்கும் மேலான நாடுகள் இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு மிகக் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படியொரு கருத்தை பெரும்பாலோர் கோமாளித்தனமாகவே பார்த்தனர்.

மலேசிய மருத்துவ சங்கம் மற்றும் லண்டன் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மலேசிய மருத்துவர் உள்பட பல்வேறு தரப்பினர் இவருடைய இக்கூற்றுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

அரசியலுக்கு வருவதற்கு முன் அடாம் பாபா ஒரு முழுநேர மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிதொரு வேளையில், 500 நாடுகளைச் சேர்ந்த பேராளர்களுடன் ‘ஸூம்’ தொழில்நுட்பம் வழி கலந்துரையாடியதாக குறிப்பிட்டு மற்றொரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டார் அவர்.

வாய்த்தவறி கூறிவிட்டேன், 500 நாடுகள் இல்லை, 500 பேராளர்களுடன் உரையிடினேன் என அதற்கடுத்த நாள் அவர் சமாதானம் கூறிய போதிலும் எதிர்கட்சி அரசியல்வாதிகள் உள்பட பொது மக்களும் அவரை விட்டபாடில்லை.

500 பேருடன் உரையாடியதற்கான அத்தாட்ச்சி எங்கே என ஜ.செ.க.வின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூட கேள்வி எழுப்பினார்.

மலேசியாவில் 15 மாநிலங்கள் உள்ளன என்றத் தோரணையில் அவர் ஆற்றியுள்ள ஒரு உரையும் கூட இத்தருணத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாகியது அவருக்கு மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கிடையே நம் நாட்டில் கோவிட்-19 தொற்று நோய் இந்த அளவுக்கு பரவியதற்கு முன்னைய பக்காத்தான் அரசாங்கம்தான் காரணம் என கடந்த வாரத்தில் திடீரென ஒரு அறிவிப்பை செய்து எதிர்கட்சியினரை வம்புக்கு இழுத்துவிட்டார்.

ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற தப்லிக் நிகழ்ச்சியை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி தடை செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் பல எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனத்திற்குள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது அப்போதைய உள்துறை அமைச்சர்தான் என ஸுல்கிஃப்லி பதிலுரைக்க, அடாம் பாபா வாயடைத்துப் போனார்.