நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பினால், இந்த சனிக்கிழமை தொடங்கி இந்த நோக்கத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
மலேசிய காவல்துறை மற்றும் தொடர்புத் துறை, பல்ஊடக அமைச்சகத்துடன் உருவாக்கப்பட்ட ‘கெராக் மலேசியா’ இணைய விண்ணப்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
“இருப்பினும் இது இன்னும் ஆய்வில் உள்ளது. இது தொடங்கப்பட்டாலும் கூட அது மே 1க்குப் பிறகு தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
“திறன்பேசி வசதிகள் இல்லாதவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம், ஆனால் காவல் நிலையத்தில் நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்” என்றார்.
“பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் பெயர், எத்தனை குடும்ப உறுப்பினர்கள், எங்கு செல்ல வேண்டும், எந்த ஊர், சிவப்பு அல்லது பச்சை மண்டலம் மற்றும் பல தகவல்களை வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.