50 புதிய பாதிப்புகள், மற்றொரு இறப்பு, 103 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் இன்று பிற்பகல் நிலவரப்படி 50 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மலேசியாவின் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,532 ஆகக் கொண்டு வந்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில், செயலில் உள்ள கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1,987 என்று கூறினார்.

“43 கோவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் 25 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

நாட்டில் மற்றொரு இறப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார். இதன் விளைவாக இதுவரை கோவிட்-19 நோயினால் மலேசியாவில் மொத்தம் 93 பேர் இறந்துள்ளனர்.

சமீபத்திய இறப்பு, புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்த வரலாற்றைக் கொண்ட 72 வயதான மலேசியப் பெண்ணுடன் தொடர்புடையது.

“அவர் 20 ஏப்ரல் 2020 அன்று சரவாக் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 22 ஏப்ரல் 2020 அன்று காலை 9.15 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சுகாதார அமைச்சு அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

ஜோகூர் பெங்கெராங்கில் ஒரு புதிய கிளஸ்டர்

இதற்கிடையில், ஜொகூரின் பெங்கெராங்கில் ஒரு புதிய கிளஸ்டர் தொடங்கியுள்ளதை சுகாதார அமைச்சு கண்டுபிடித்ததாக நூர் ஹிஷாம் கூறினார்.

“கிளஸ்டரின் ‘மூலமாக’ இருந்த ‘நோயாளி 1508’, மார்ச் 12 ஆம் தேதி அறிகுறிகளைக் காணத் தொடங்கினார். அவர் மார்ச் 16, 2020 அன்று ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டிங்கிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது”.

“அடுத்த நாள், அவர் பெங்கேராங்கிற்குத் திரும்புவதற்கு முன்பு சிலாங்கூரைச் சுற்றியுள்ள உறவினர்களைப் பார்க்க பல மாநிலங்களைக் கடந்துள்ளார். மார்ச் 18, 2020 அன்று அவர் பெங்கேராங்கிற்குத் திரும்பினார்.”

“அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. 2020 மார்ச் 20 அன்று ஜோகூரின் சுல்தானா அமினா மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மார்ச் 22, 2020 அன்று கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சாதகமாக கண்டறியப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

இதனால், ஏப்ரல் 22 ஆம் தேதி நிலவரப்படி, 15 கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதில், அவரின் பத்து சக ஊழியர்கள் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். 79 வயதுடைய அவரது தாயார் மற்றும் அவரது 10 வயது மகளும் இதில் அடங்குவர்.

“இந்த கிளஸ்டரின் மொத்தம் ஏழு (7) பாதிப்புகள் இன்னும் சிகிச்சையில் உள்ளன. மேலும் எட்டு (8) பாதிப்புகள் முழுமையாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளன.

“ஒட்டுமொத்தமாக, இந்த கிளஸ்டரில் மூன்று (3) பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்றுள்ளன.

“பிற மாநிலங்களில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட தொற்று, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய நாள் அவர் மேற்கொண்ட பயண நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.