தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (MKN) குடும்ப வன்முறை தொடர்பான சமூக சேவை முயற்சியை மகளிர் பாதுகாப்பு அமைப்பு (WAO) பாராட்டியது.
இந்த முயற்சியின் மூலம் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் Talian Kasih எண்ணை தொடர்பு கொள்ள தூண்டியுள்ளது என்று அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இதன் மூலம் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெற முயற்சிக்கின்றனர்” என்று இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அத்தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்படி, ஏப்ரல் 12 அன்று, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தொலைக்காட்சியில் ‘Talian Kasih’ என்று குறிப்பிட்டதில் இருந்து, தினசரி அழைப்புகளின் எண்ணிக்கை சுமார் 10 முதல் 40 வரை அதிகரித்துள்ளது.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது.
வீட்டு வன்முறை குறித்த சமூக சேவை செய்திகளை தொடர்ந்து வெளியிடுமாறு WAO அரசாங்கத்திற்கு, குறிப்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மற்றும் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போதும், அதற்குப் பின்னரும் இது தொடரப்பட வேண்டும். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு முழுவதும் குடும்ப வன்முறைகளில் இருந்து தப்பி ஓடியதற்காக அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலம் முழுவதும் பாதுகாப்பு உத்தரவு, அவசரகால பாதுகாப்பு உத்தரவு, இடைக்கால பாதுகாப்பு உத்தரவு போன்ற பாதுகாப்பு உத்தரவுகளைப் பற்றி ஊடகங்கள் அல்லது சமூக ஊடக அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் WAO பரிந்துரைத்தது.
“தற்போது, இது போன்ற உத்தரவுகளை நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் எவ்வாறு பெறுவது என்பது குறித்து பாதிக்கப்பட்டவருக்குத் தெரியவில்லை. இது பற்றிய தகவல்களையும் அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்”.
அழைப்புகளின் அதிகரிப்புக்கு ஏற்ப, ஆபரேட்டர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க WAO அழைப்பு விடுத்தது.
இஸ்மாயிலின் அறிவிப்பை தொடர்ந்து, ஏப்ரல் 20 அன்று அனுப்பப்பட்ட முதல் குறுஞ்செய்தி சேவை (எஸ்எம்எஸ்) குடும்ப வன்முறை மற்றும் குழந்தை உரிமைகள் மீதான தொலைபேசி அழைப்புகள் அதிகரிக்கவும் பங்களித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, குடும்ப வன்முறை வழக்குகளை அரசாங்கம் தீவிரமாகப் பார்ப்பதாகவும், அது குறித்து காவல்துறைக்கு அல்லது குறிப்பிட்ட எண்ணுக்கு புகார் செய்ய தயங்க வேண்டாம் என்றும் அந்த குறுஞ்செய்தி குறிப்பிட்டிருந்தது.
WAO, குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் ஆலோசனைகளை வழங்கும். பாதிக்கப்பட்டவர்கள், 24 மணி நேரம் செயல்படும் 03-79563488 என்ற எண்ணில் WAO ஹாட்லைனை தொடர்பு கொள்ளலாம் என்பதை நினைவூட்டப்படுகிறார்கள். உதவி மற்றும் ஆதரவுக்காக 018-9888058க்கு ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பபலாம். அல்லது 15999 என்ற Talian Kasih எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.