பாக்காத்தான் தொகுதிகளுக்கு உதவி வழங்குவதில் தாமதம் ஏன்?

கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்க ஆதரவிலான 700க்கும் மேற்பட்ட உணவு பொருள் உதவி மூட்டைகள் இன்னும் மக்களுக்கு சென்றடையாதது குறித்து செராஸ் எம்.பி. டான் கோக் வாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன்பு, டான் ஏற்கனவே விநியோகிக்கப்படாத உணவு உதவியைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

“கடவுளே! உதவி (உணவு) இன்னும் இங்கே தான் உள்ளதா!” என்று அந்த செராஸ் எம்.பி. நேற்று பிற்பகல் துன் ரசாக் விளையாட்டு வளாகத்தை பார்வையிட்ட போது கூறினார்.

அங்கு சுமார் 750 மூட்டை உணவு பொருள்களும், 750 அரிசி மூட்டைகளும் (தலா 10 கிலோ) இருந்தன.

உணவு மூட்டைகளில் இரண்டு பை கோதுமை மாவு, மூன்று புட்டி சமையல் எண்ணெய், மூன்று பை சர்க்கரை, ஒரு பை மீகூன், உப்பு, சார்டின், பால், கிச்சாப், சில்லி சாஸ், பிஸ்கட், உலர்ந்த மிளகாய், டீத்தூள், காப்பித்தூள் என்று இன்னும் இருந்தன.

டெஸ்கோவின் வலைத்தளத்தின் விலையின்படி, ஒவ்வொரு உணவுப் மூட்டையும் RM110 மதிப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தன் தொகுதியில் வசிப்பவர்களிடமிருந்து உதவி கோரப்பட்டதாகவும், ஆனால் உணவுப் பொருள் உதவிகளை விநியோகிக்க அதிகாரிகள் இன்னும் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் டான் மலேசியாகினியிடம் கூறினார்.

உணவு உதவி கேட்ட பொதுமக்களிடமிருந்து பெற்ற சில மின்னஞ்சல்களையும் அவர் வெளிப்படுத்தினார்.

ஒப்புதல் கடிதம் இல்லை

தேவைப்படுபவர்களுக்கு உணவு வாங்க இதுவரை தனது சொந்த பணத்தையும் நன்கொடைகளையும் பயன்படுத்தியதாகவும், ஆனால் அது போதவில்லை என்றும் டான் கூறினார்.

இதனிடையே, ஆளும் கட்சியைச் சேர்ந்த பண்டார் துன் ரசாக் எம்.பி. கமருதீன் ஜாபர், தன் தொகுதிக்கு உணவுப் பொருள் உதவிகளை விநியோகிக்க மக்கள் நலத்துறையின் ஒப்புதலை பெற்றுள்ளதாக கூறினார். இந்த ஒருதலைப்பட்ச நிலைமை குறித்தும் அவர் புகார் கூறினார்.

“நாங்கள் இப்போது எதிர்க்கட்சி. எனவே எங்களுக்கு எந்த ஒப்புதல் கடிதமும் வழங்கப்படவில்லை. ஒப்புதல் கடிதம் இல்லாமல், அதை விநியோகிக்க எங்களால் முடியாது,” என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் ஜே.கே.எம் அதிகாரிகளைத் தொடர்புகொள்வதிலும் அவரது ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது உதவி விநியோகத்தில் யாரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்ற பெண்கள், குடும்ப மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருனின் அறிக்கையையும் டான் விமர்சித்தார்.

“அவர் பொய் சொல்கிறார். தேசிய கூட்டணிக்கு (பி.என்) உணவு உதவி இருக்கிறது. ஆனால் பாக்காத்தானுக்கு ஏன் கிடைக்கவில்லை? என்ன பிரச்சினை? ரீனா ஒரு நியாயமான விளக்கத்தை வழங்க வேண்டும்”.

“மக்கள் உதவி கேட்கிறார்கள். அரசாங்கம் ஏன் பாராபட்சமாக எதிர்க்கட்சியை ஒதுக்குகிறது? எனது பகுதியில் உள்ள மக்களுக்கும் அவர்களின் பகுதி மக்களுக்கும் ஏதும் வித்தியாசம் உள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ, குறைந்தது 54 எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தொகுதிகள் தங்கள் தொகுதிகளுக்கான உணவு உதவிகளை இன்னும் பெறவில்லை என்று கூறினார்.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் துணை அமைச்சரான யோஹ், தன் செகாம்புட் பகுதிக்கு 250 மூட்டைகள் மட்டுமே கிடைத்ததாகக் கூறினார்.

முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமதுவின் கீழ் உள்ள லங்காவி மட்டுமே 1,000 மூட்டை உணவு உதவிகளைப் பெற்ற ஒரே எதிர்க்கட்சி பகுதி என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

பாக்காத்தானின் நூர் அமீன் அகமதுவின் கீழ் உள்ள கங்கார் நாடாளுமன்ற தொகுதியும், பெர்சத்து அமிருதீன் ஹம்ஸாவின் கீழ் கூபாங் பாசு தொகுதியும் தலா 900 மூட்டைகளை பெற்றுள்ளன. பெர்சத்துவில், அமிருதீன், மகாதீரின் ஆதரவாளராக இருக்கிறார்.