MCO-வை மீறிய குற்றச்சாட்டில் அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமீடியின் மகள், காவல்துறை விசாரணை

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிதாயா, புக்கிட் அமானில் இன்று போலீசாருக்கு வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை மலேசியாகினி தொடர்பு கொண்டபோது நூருல்ஹிதாயா இதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இன்று காலை 11 மணியளவில் அவரது கணவருடன், குற்றவியல் புலனாய்வு பிரிவு (D5)-ன் கீழ் பதிவு செய்யப்படும் என்று அறியப்படுகிறது.

நூருல்ஹிதாயா சமீபத்தில் புத்ராஜெயாவில் சுற்றுச்சூழல் அமைச்சர் அகமட் மஸ்ரிசல் முஹம்மதுவை சந்தித்த பின்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார். அவர், அவரது கணவர், மற்றும் மஸ்ரிசலும் இடைவெளிவிட்டு நிற்பதை படம் காட்டுகிறது. அவர் பின் மத அமைச்சர் சுல்கிப்லி முகமதுவையும் சந்தித்துள்ளார்.

நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்ட பின்னர், இது குறித்து போலீஸ் புகார் செய்யுமாறு நூருல் அவர்களுக்கு சவால் விடுத்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, ஒரு நபர், காவல்துறையினரிடமிருந்தோ அல்லது அதிகாரிகளிடமிருந்தோ சிறப்பு அனுமதியைப் பெற்றால் மட்டுமே 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் காரில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி உட்பட பல அரசியல் பிரதிநிதிகளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்காக விமர்சனங்களைப் பெற்றுள்ளனர். டாக்டர் நூர் அஸ்மி கசாலி இதற்காக பின் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும், இது போன்ற குற்றங்களை விசாரிக்க போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்.