செலாயாங் மொத்த விற்பனை சந்தை கடுமையான கட்டுப்பாடுடன் செயல்படத் தொடங்கியது

நான்கு நாட்கள் கிருமிநாசினி மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட பின்னர், செலயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியதாக கூட்டரசுப்பிரதேச மாநகராட்சி மன்றத் தலைவர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மொத்த விற்பனை சந்தையின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார். வியாபாரிகளுக்கு மத்தியில் கோவிட்-19 பாதிப்பைத் தடுக்க கடுமையான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்படுகின்றன.

கூடுதலாக, விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் முகக்கவரி மற்றும் கையுறைகள் போன்ற பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் (பிபிஇ) பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அட்டவணைப்படி லாரிகள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் விதிகளுக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால், மொத்த விற்பனை சந்தையின் செயல்பாடுகளை நாங்கள் மீண்டும் மூடுவோம்” என்று கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, மலேசியாவிற்கான சீனத் தூதர் பாய் தியான் அவர்களால் சீன அரசாங்கத்திடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 100,000 முகக்கவரிகளை அவர் நன்கொடையாகப் பெற்றார்.

இந்த நன்கொடை கோவிட்-19 பாதிப்பைத் தடுக்கும் நோக்கில், முன்னணி பணியாளர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் விநியோகிப்பதற்கு ஆகும்.