‘கூடுதல் உதவி இல்லாமல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நீட்டிப்பது அரசாங்கத்தின் தவறு’ – நஜிப்

கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றி மிகவும் பாதிக்கப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு நஜிப் ரசாக் இன்று நினைவூட்டினார்.

பிரதமர் மக்களுக்கு சிறந்த நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். அதே போல் அரசு செயல்முறையை எளிமைப்படுத்தவும் அதிகாரத்துவத்தை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

“அரசாங்கத்தின் உதவியும் கவனமும் தேவைப்படும்போது நாம் அவர்களுடன் கஞ்சத்தனமாக இருக்கக்கூடாது”.

“B40 மற்றும் M40 போன்ற குழுக்களுக்கு மேம்பட்ட உதவி தொகுப்புகள் அளித்து உதவ வேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகவோ பயனற்றவர்களாகவோ இருக்கின்றார்கள் என்றல்ல. தொற்றுநோய் பரவியுள்ளதால், வேலைக்காக வெளியேற அனுமதியில்லாமல் அவர்களின் குடும்பங்களின் நலனுக்காக வாழ்க்கையை தொடர வழியின்றி உள்ளனர்”.

“இது மக்களின் தவறு அல்ல. அரசாங்கம், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீண்டும் நீட்டிக்க தேவைப்பட்டால் மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் உதவியை தாமதமாக அளிப்பதும் அல்லது கூடுதல் உதவி இல்லாமலும், உத்தரவை மூன்றாவது முறையாக நீட்டித்தால் அது அரசாங்கத்தின் தவறு.” என்று அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, மே 12 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று நேற்று முகிதீன் அறிவித்தார். இந்த நேரத்தில், அடுத்த நடவடிக்கைகளை தீர்மானிக்க சுகாதார அமைச்சகம் (MOH) வழங்கிய சமீபத்திய தரவை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும்.

கோவிட்-19 பரவுவதைத் தடுக்க மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இது இப்போது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19இன் கடினமான சூழ்நிலையை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் பிப்ரவரி 27 அன்று RM250 பில்லியன் தேசிய உதவியை (Bantuan Prihatian Nasional (BPN)) அறிமுகப்படுத்தியது.

பிப்ரவரி 27 அன்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கோவிட்-19க்கான RM20 பில்லியன் பொருளாதார தூண்டுதல் தொகுப்பையும் அறிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) நிதிச் சுமையை எளிதாக்க உதவும் சிறப்பு RM10 பில்லியன் (துணை) தொகுப்பை ஏப்ரல் 6 அன்று முகிதீன் அறிவித்தார்.