மே 18 நாடாளுமன்ற அமர்வு, எதிர்க்கட்சித் தலைவர் யார்?

எதிர்க்கட்சித் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து தற்போது மிகப்பெரிய எதிர்க்கட்சியான பாக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை.

தற்போது, எதிர்க்கட்சித் தலைவராக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் (போர்ட் டிக்சன்) மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் (லங்காவி) ஆகிய இரு வேட்பாளர்களில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.

நடைமுறையாக, இந்த பதவி மிகப்பெரிய எதிர்க்கட்சியால் வகிக்கப்படும். அதன் அடிப்படையில், மிகப்பெரிய எதிர்க்கட்சி டி.ஏ.பி. கட்சியாகும்.

இருப்பினும், முந்தைய பி.எச். கூட்டத்தின் போது டி.ஏ.பி. இந்த பதவியில் ஆர்வம் காட்டவில்லை என்று பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் கூறினார்.

இது குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்த கலந்துரையாடல்களுக்காக மகாதீர் மற்றும் வாரிசான் கட்சித்தலைவர் முகமட் ஷாபி அப்தால் ஆகியோரை சந்தித்ததாக அவர் மேலும் கூறினார்.

மே 18 அன்று நடைபெறும் ஒருநாள் நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக அவர்கள் முடிவெடுப்பதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

முன்பு பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வகித்த பதவியை மகாதீர் நிரப்புவாரா என்று கேட்டபோது, “என்னிடம் எந்த பதிலும் இல்லை. நாங்கள் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், டி.ஏ.பி. தலைவர் தான் கோக் வாய்-யை தொடர்பு கொண்டபோது, தனது கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்காது என்பதை உறுதிப்படுத்தினார்.

ஒரு நாள் அமர்வு என்றாலும், நாடாளுமன்றம் இம்முறை – முதல் முறையாக – ஓர் அரசியல் கட்சி, இரண்டு தனித்தனி பக்கங்களில் ஒரே நேரத்தில் அமர்ந்திருப்பதைக் காணும்.

பாரிசான் மற்றும் பாஸ் கட்சியுடன் தேசிய கூட்டணி (Perikatan Nasional (PN)) அமைத்து புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பெர்சத்து, – அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என்று இரு பக்கங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெர்சத்து பிரதிநிதிகளின் இருக்கைகள், மகாதிர் அல்லது முகிதீன் யாசினுக்கு ஆதரவாக அவர்களின் நிலைப்பாட்டால் தீர்மானிக்கப்படும்.

கட்சி அடிப்படையிலான முடிவுகள்

பிப்ரவரி 24 அன்று, பெர்சத்து பாக்காத்தானை விட்டு வெளியேறியது. அதனை தொடர்ந்து, மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இறுதியில் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதமராக முகிதீன் நியமிக்கப்பட்டார். அம்னோ, பாஸ் மற்றும் சரவாக் கூட்டணியின் அனைத்து பிரதிநிதிகளும் அவருடன் இணைந்தனர்.

மகாதீருக்கு விசுவாசமாக இருப்பதாக நம்பப்படும் ஒரு சிறிய குழு குறிப்பாக அவரது மகன் முக்ரிஸ் (ஜெர்லுன்) மற்றும் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் (முவார்), எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்து அவருடன் சேர்ந்து கொள்வார்கள் என தெரிகிறது.

அமனா கட்சியின் துணைத் தலைவர் சலாவுதீன் அயூப், எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பாக்காத்தானின் ஒருமித்த கருத்தை தனது கட்சி ஏற்கும் என்றார்.

அன்வார் இந்த விஷயத்தில் ஒரு கலவையான பதிலை அளித்துள்ளார்.

“இப்போதைக்கு, நான் எதிர்க்கட்சியை வழிநடத்துகிறேன். பாக்காத்தான் ஹராப்பானில் 92 பிரதிநிதிகள் உள்ளனர். மீதமுள்ள கட்சிகளான டி.ஏ.பி., பி.கே.ஆர். மற்றும் அமானா ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துள்ளனர். PH-ஐப் பொறுத்தவரை, அது இன்னும் அப்படியே இருக்கிறது, நான் அதன் தலைவராக இருக்கிறேன். இருப்பினும், நாங்கள் மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.