மே 18 ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இடங்களை இழக்க நேரிடும் என்று டிஏபி அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் எச்சரித்தார்.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
“முதலில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், குறிப்பாக டிஏபி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்”.
“அவர்கள் இந்த அமர்வில் கலந்து கொள்ளாவிட்டால், அவர்களின் இருக்கை காலியாகிறது என்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இடைத்தேர்தலும் நடத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய இந்த மே 18 அமர்வு நடத்தப்படுகிறது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பைத் தொடர்ந்து இது ஒரு நாள் மட்டுமே நீடிக்கும்.
முன்னதாக இது மார்ச் 9 அன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் புதிய தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தால் தாமதமானது.
மலேசிய அரசியலமைப்பின் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்ற கூட்டத்தை அமைக்க வேண்டும். கடைசி கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று நடைபெற்றது.
இதேபோல், அரசியலமைப்பில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் பிரிவு 52(1) படி, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அமர்வில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை காலியாகி இருப்பதாக அறிவிக்கப்படலாம்.