மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், கத்தார் அபிவிருத்தி நிதியிலிருந்து (Qatar Development Fund) பெற்ற 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் தனிப்பட்ட கணக்கில் வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
“கத்தார் அபிவிருத்தி நிதியிலிருந்து, நிதி பெற்று எனது தனிப்பட்ட கணக்கில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டி முகநூலில் பல பதிவுகள் உள்ளன”.
“அக்குற்றச்சாட்டுகள் அவதூறானவை, அவை என்னை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டவை” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவ பாரிசன் நேஷனல் (பிஎன்) அரசாங்கம் கடந்த காலங்களில் நிதி திரட்டியதாக அவர் கூறினார்.
அந்த நேரத்தில் மலேசிய பிரச்சினைக்கு கத்தார் ஆதரவாக இருந்தது.
“ஆனால் அந்த நேரத்தில் அரசாங்கம் ரோஹிங்கியாக்களுக்கு உதவ எந்த நிதியையும் உதவியையும் பெறவில்லை. புத்ராஜெயாவில் மாற்றம் வரும் வரை…” என்று அவர் கூறினார்.
“பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றியபோது தான் 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி பெறப்பட்டது” என்றார்.
இதற்கு ஆதரவாக, முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலுடன் முகநூல் இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.
“ரோஹிங்கியா அகதிகள் நிவாரண திட்டத்திற்காக கத்தார் அரசாங்கம் 50 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கியதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” – நவம்பர் 25, 2018 தேதியிட்ட ஒரு பதிவில், டாக்டர் வான் அஜிசா இவ்வாறு எழுதியுள்ளார்.
கத்தார் நிதி குறித்த விரிவான விளக்கத்தை வழங்குமாறு ஜாஹிட் பாக்காத்தானுக்கு வலியுறுத்தியுள்ளார்.
“கத்தார் தூதர் எஸ்சா முகமட் கூட, மலேசியாவில் ரோஹிங்கியா சமூகத்திற்கு உதவ, கத்தார் அரசாங்கம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது என்பதை உறுதிபடுத்தியுள்ளார்”, என்று கூறினார்.
“கத்தார் கல்வி, அறிவியல் மற்றும் சமூக மேம்பாடு மற்றும் அத்தியாவசிய கல்விக்கான தலைவர், யாம் ஷேகா மொசா நாசர் மலேசியாவிற்கு வந்து, அகதிகள் கற்றல் மையத்திற்கு வருகை தந்ததன் மூலம் இந்த கூற்று வலுப்பெற்றது” என்று அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து தெளிவுபெற, மலேசியாகினி, டாக்டர் வான் அஜிசாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.