இனி இரண்டு குடும்ப உறுப்பினர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதி

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காம் கட்டம் இன்று தொடங்கியுள்ளது. உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைக்கு பொருள்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள், இனி மற்றொரு குடும்ப உறுப்பினரையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த விதி, இன்று முதல் அடுத்த மே 12 வரை நடைமுறையில் இருக்கும்.

எவ்வாறாயினும், அவர்களுடன் வெளியே செல்லும் நபர் ஒரே இல்லத்தின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

முந்தைய விதியின் கீழ், ‘பாதிக்கப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் நபர்கள் வேறு எந்த நபருடனும் செல்ல முடியாது, அப்படி உடன் சென்றால், அது நியாயமான காரணத்திற்காக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

புதுப்பிக்கப்பட்ட விதியின் கீழ், பொதுமக்கள் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முந்தைய விதி, மக்கள் “உணவு, மருந்து, உணவுப் பொருட்கள் அல்லது அன்றாட தேவைகளுக்கு” மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று கூறியிருந்தது.

புதிய விதி பட்டியலில் “எந்தவொரு அத்தியாவசிய சேவை வழங்குநரிடம் இருந்து வேறு எந்த பொருளும் வாங்கலாம்” (“apa-apa barang lain daripada mana-mana penyedia perkhidmatan perlu”) என்று சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறை பதிவேட்டில், சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா கையெழுத்திட்டுள்ளார்.

மூன்றாம் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நேற்றோடு முடிவடையவிருந்தது. ஆனால் மே 12 வரை நீட்டிக்கப்பட்டது.
மார்ச் 18 முதல் மலேசியா நடமாட்டக் கட்டுப்பாடில் வைக்கப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ், குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் அனைத்து வணிகங்களும் சேவைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் 10கி.மீ.க்குள் மளிகைப் பொருட்களை வாங்குவது போன்ற அங்கீகரிக்கப்பட்ட காரணங்களைத் தவிர பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை.

கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாட்டின் பெரும்பகுதியான பொருளாதாரத்தை நிறுத்தவும் காரணமாக அமைந்துள்ளது.