கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், தனது முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மீது எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
1998-இல், அன்வார் மற்றும் அஸ்மின் இணைந்து அக்கட்சியை உருவாக்கினார்கள்.
இருப்பினும், பின்னர் அவர்களின் உறவு துண்டிக்கப்பட்டு, கட்சி பிளவுபட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், “ஷெரட்டன் நகர்வை” வழிநடத்தி, அன்வார் எட்டாவது பிரதமராகும் வாய்ப்புகளை தகர்த்தார் அஸ்மின். இது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை வீழ்த்தியது.
அஸ்மின் பின்னர், பி.கே.ஆரிலிருந்து நீக்கப்பட்டு பெர்சத்து கட்சியில் சேர்ந்தார். பின்னர் தேசிய கூட்டணியின் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இன்று காலை ஒரு நேர்காணலில், அஸ்மினின் ‘துரோக’ செயலில் அவர் ஏமாற்றமடைந்துள்ள போதிலும், அவர் மீது வெறுப்போ, பழிவாங்கும் எண்ணமோ ஏதுமில்லை என்றார் அன்வார்.
பி.கே.ஆர். தனது இணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா என்றும் அன்வாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
72 வயதான அன்வார், அதை தீர்மானிக்க கட்சிக்கு விட்டு விடுவதாக கூறினார்.
பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் அல்லது அவரது மகளும் பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா, ஒரு சாத்தியமான வேட்பாளராக இருக்கிறார்களா என்று கேட்ட போது அன்வார் அதே பதிலைக் கொடுத்தார்.
“நூருல் இசா நிச்சயமாக பெர்மாத்தாங் பாவோ மீது கவனம் செலுத்துவார்,” என்று அவர் கூறினார்.