நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காவது கட்டத்தில் மேலும் சில தளர்வுகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார். இருப்பினும் அந்த தளர்வுகள் பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை.
முன்னதாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடர்பான ஊடக மாநாட்டில் பேசிய அவர், இன்று முதல் ஒரு வாகனத்தில் இரண்டு பேரை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.
அவர்கள் ஒரே வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும், உணவு மற்றும் அன்றாட தேவைகளை வாங்குவதற்கான பயணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக குடும்பத் தலைவர்கள் மட்டுமே உணவு மற்றும் அன்றாட தேவைகளை வாங்குவதற்காக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காவது கட்டத்தில் மேலும் சில தளர்வுகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக 643 பேரை நேற்று போலீசார் கைது செய்ததாகவும், இது மொத்த கைதுகளின் எண்ணிக்கையை 21,749 பேருக்கு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று நாடு திரும்பிய மொத்தம் 838 மலேசியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் வட பகுதிகளில் 653 மாணவர்கள் இன்று பிற்பகல் தொடங்கி 44 பேருந்துகளில் அதே பகுதிகளில் உள்ள தங்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.