கத்தாரின் AS$50 மில்லியன் நன்கொடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டது : ஜாஹிட்டுக்கு அஜீசா பதில்

மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு கட்டாரில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை ஒருபோதும் பக்காத்தான் ஹராப்பானுக்கு அளிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த நிதி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, தேசிய நல அறக்கட்டளை (Yayasan Kebajikan Negara) ஒரு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருந்தது.

நேற்று அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, அந்த 50 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை நிதியை தனது தனிப்பட்ட கணக்கில் வைத்துக்கொண்டார் என்பதை மறுத்தார். பாக்காத்தன் அந்த நிதி குறித்து ஒரு விளக்கத்தைக் அளிக்க வேண்டும் என்றும் ஜாஹிட் நேற்று கேட்டுக்கொண்டார்.

அதை அடுத்து, பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துறையின் முன்னால் அமைச்சராக இருந்த வான் அஜிசா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

“தற்போது தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ள அம்னோ கட்சியின் தலைவராக இருக்கும் ஜாஹிட், இது தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரைத் தொடர்பு கொண்டால் சுலபமாக பெற முடியும்”.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நன்கொடை நிதி ஒருபோதும் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு அனுப்பப்படவில்லை. மாறாக, அந்நிதியை கத்தார் நேரடியாக கத்தார் அறக்கட்டளையின் (Qatar Charity (QC) மூலம், சம்பந்தப்பட்ட அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) நேரடியாக வழங்கியது.

“பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனமான தேசிய நல அறக்கட்டளை (Yayasan Kebajikan Negara (YKN), ஏப்ரல் 5, 2019-ன் அமைச்சரவை முடிவுக்கு ஏற்ப இந்த மானியத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுவாக இருந்தது.

“அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை (Majlis Keselamatan Negara (MKN)) இந்த திட்டத்தின் மேற்பார்வைக் குழு தலைவராக நியமிக்க முடிவு செய்தது. மேலும் அது 23 பிப்ரவரி 2020 வரை என் தலைமையிலான ஒரு குழுவுக்கு நேரடியாக அறிக்கையை அளித்து வந்தது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கான உதவி மானியத்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல மேலாண்மையுடன் நிர்வகிப்பதை உறுதி செய்யும் வகையில் பாக்காத்தான் அரசாங்கம் அப்படி ஒழுங்குபடுத்தியது என்றும் அஜிசா விளக்கினார்.

முந்தைய பாரிசான் அரசாங்கத்திற்கு கத்தார் ஆரம்பத்தில் உறுதியளித்த 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய RM217.7 மில்லியன்), 14-ஆம் பொது தேர்தலுக்குப் பிறகு பாக்காத்தான் அரசாங்கத்தால் பெறப்பட்டதாக ஜாஹிட் சமூக ஊடக பதிவில் கூறினார்.

நன்கொடை அளித்த கத்தார் அரசுக்கு 2018 நவம்பரில் நன்றி தெரிவித்த டாக்டர் வான் அஜிசாவின் ஊடக பதிவு இணைப்பையும் ஜாஹிட் தனது பதிவில் பகிர்ந்தார்.

இன்று ஒரு அறிக்கையில், வான் அஜிசா, கத்தார் அபிவிருத்திக்கான நிதியிலிருந்து (Qatar Fund for Development (QFFD)) ரோஹிங்கியா அகதிகளுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் சுயாதீனமான வாழ்க்கை ஆகிய மூன்று துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகளைப் பற்றி ஆழமாக விளக்கினார்.

ரோஹிங்கியாக்களுக்கு உதவ மலேசிய அரசாங்கத்தின் சுமையை குறைக்க கட்டாரின் நிதி உதவியுள்ளது என்று வான் அஜிசா கூறினார்.

எவ்வாறாயினும், ரோஹிங்கியா வெகுஜன அகதிகளை அண்டை நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு பதிலாக, மியான்மர் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.