நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்து ஆதரிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் உயர் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு வழக்கறிஞரான மனோகரன், குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது ‘போதுமானதல்ல’ என்றும், இருவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“பேராக் நகரில் உள்ள ஈப்போ அல்லது தைப்பிங் உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டுகளின் உத்தரவை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை 11 (1)ஐ தெளிவாக மீறியுள்ளதால் சுகாதார துணை அமைச்சர் மற்றும் பேராக் எக்ஸ்கோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க வேண்டும்”.
“அவர்கள், இயக்க நடைமுறைகளை (SOP) மட்டும் மீறவில்லை. நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை தெளிவாக மீறியுள்ளனர். அதே விதிமுறைகளின் விதி 11(1)இன் கீழ் அவர்கள் தண்டிக்கப்படலாம்.”
“[…] இந்த வழக்கில் சிறைத் தண்டனையே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், உலகெங்கிலும் பலர் இறக்கும் இந்த நேரத்தில், எந்த கொண்டாட்டமும் விருந்தோம்பலும் மோசமான ஒன்றாகும்” என்று அந்த முன்னாள் கோத்தா ஆலம் ஷா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூடல் இடைவெளியை பின்பற்றாமல், இந்த மாத தொடக்கத்தில் லெங்கோங்கில் உள்ள ஒரு தாபிஸ் பள்ளிக்குச் சென்று விருந்துணவைப் பகிர்ந்துகொண்டபோது, நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதாக நூர் அஸ்மி மற்றும் ரஸ்மான் செவ்வாய்க்கிழமை தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் கெரிக்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் RM1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ், எந்தவொரு கீழ் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளின் பதிவையும் ஒரு நீதிபதி மதிப்பாய்வு செய்யலாம்.
இது தொடர்பாக, கெரிக் நீதிமன்றத் தீர்ப்பை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்று மனோகரன் கூறினார்.
“மலேசியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 8, சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம் என்று கூறுகிறது”.
இதே போன்ற குற்றங்களுக்காக சாமானிய மக்களை சிறையில் அடைப்பதும், ஆனால் இந்த இரு அரசியல் பிரமுகர்களுக்கு அபராதம் மட்டும் விதிப்பதும், தண்டனை வழங்குவதில் பாராபட்சமாக உள்ளது என்ற குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று மறுத்தார்.
“மக்கள் பிரதிநிதிகள் விதிமுறைகளுக்கு இணங்க, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் காலத்தின் போது மக்களுக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, நூர் அஸ்மி மற்றும் ரஸ்மான் ஆகியோர் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறவில்லை, மாறாக SOPஐ மட்டுமே மீறியுள்ளனர், கூடல் இடைவெளியை கடைபிடிக்கவில்லை”, என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இவ்விரண்டு பிரதிநிதிகளின் தவறுகளை அமைச்சரால் குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறிய வக்கீல் சரிட்சான் ஜோஹன் இந்த விளக்கத்தை கண்டித்தார்.
இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளராக இருக்கும் சரிட்சான், பல்வேறு நோக்கங்களுக்காக கூடும் கூட்டங்கள் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
எந்தவொரு சாதாரண மனிதன் செய்த குற்றத்திலிருந்து இது வேறுபட்டதல்ல என்றும் அவர் கூறினார்.