‘குடிமக்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்’ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

நாட்டில் குடிமக்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குழு வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை அனைத்து மலேசியர்களின் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் என்பதை அது வலியுறுத்தியது.

“குடிமக்கள் அல்லாதவர்களின் நலம் சரியாக கவனிக்கப்படுவதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும்” என்று அக்குழு நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடிமக்கள் அல்லாத பலர், கடினமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளால், கோவிட்-19 உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அக்குழு கூறியுள்ளது.

“கோவிட்-19, ஒருவரின் பிறந்த இடம் அல்லது குடியுரிமையைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கிறது. இந்த நாட்டில் இந்த நோய் முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு, அனைவரின் ஆரோக்கியத்தையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.

இந்த அறிக்கையில், மலேசிய சுகாதார ஒன்றியம் (Malaysian Health Coalition), எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மலேசியா (Beyond Borders Malaysia), மலேசியா இஸ்லாமிய குழு (Majlis Perundingan Pertubuhan Islam Malaysia) மற்றும் தெனகனித்தா (Tenaganita) ஆகியவை இணைந்து கையெழுத்திட்டன.

வெளிநாட்டினருக்கு கோவிட்-19 சோதனை நடத்த சுகாதார அமைச்சின் நடவடிக்கையை இந்த குழு வரவேற்றது.
இருப்பினும், வெளிநாட்டினருக்கும் அகதிகளுக்கும் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு கல்வி புகட்டுவதில் அதிக முயற்சி தேவை என்று அவர்கள் கூறினர்.

“தடுப்பு குறித்த தகவல்கள், அவர்கள் எளிதில் அணுகவும் புரிந்துகொள்ளவும் கூடிய மொழிகள் மற்றும் ஊடகங்களில் இருக்க வேண்டும்.

“தேவைப்படும் நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறும் அளவுக்கு பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உணர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களை நம்பியுள்ள பொருளாதாரத் துறையில் அவர்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் இருப்பதை உறுதி செய்யுமாறும் இந்தக் குழு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

அனைத்து மலேசியர்களுக்கும் வாடகை ஒத்திவைப்பை அறிமுகப்படுத்துமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர். இது மலேசிய குடிமக்களுக்கு மட்டுமல்ல, வாடகை செலுத்த போராடும் அகதிகள் மற்றும் வெளிநாட்டினருக்கும் உதவும்.

இதற்கிடையில், தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) பகுதியில் குடியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள், இந்த உத்தரவு முடிவுக்கு வந்தவுடன் குடியேற்ற தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியதை அம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) விமர்சித்துள்ளது.

இந்த நடவடிக்கை, வெளிநாட்டினரிடையே கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியாவின் இடைக்கால நிர்வாக இயக்குனர் ப்ரீத்தி பரத்வாஜ் தெரிவித்தார்.

“மாறாக, குடியுரிமையை பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர்களுக்கும் போதுமான சுகாதார வசதியை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.”

“உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியின் போது, குடியேற்றம் தொடர்பான காரணங்களுக்காக தடுப்புக்காவலில் வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.”

“மலேசியாவில் குடிவரவு தடுப்பு மையங்கள் மோசமான நிலையில் உள்ளன என்பது அறியப்பட்ட ஒன்றாகும். இந்த உலகளாவிய தொற்றுநோயின் போது, ஆவணமற்ற வெளிநாட்டினரை, நெரிசலான, சுகாதாரமற்ற, ‘சிறப்பு சிறைச்சாலைகள்’ என்று அழைக்கப்படும் இந்த தடுப்பு மையங்களில் அடைப்பது, கோவிட்-19 பரவுவதை துரிதப்படுத்தும்” என்று அவர் கூறினார்.